ஆளுநர் மாளிகையில் இருந்து கண்டிப்பான உத்தரவு முதலில் வந்தே மாதரம், 2வது தேசிய கீதம் 3வதுதான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்: நெல்லை மனோன்மணியம் பல்கலை துணைவேந்தர் பேட்டியால் சர்ச்சை

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா வருகிற 28ம்தேதி பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை வகித்து பட்டங்களை வழங்குகிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்குகிறார். கேரளா கொச்சி மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழக நிறுவன துணைவேந்தர் மதுசூதன குரூப் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.

மொத்தம் 33,877 மாணவ மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் மாளிகை வழிகாட்டுதல்படி விழா தொடக்கத்தில் முதலாவதாக வந்தே மாதரம் பாடப்படும். தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படும். 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். நிகழ்ச்சி நிறைவில் வந்தே மாதரம் மீண்டும் பாடப்படும். இறுதியாக தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறும். இவ்வாறு துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்படுமா என்று துணைவேந்தரிடம் நிருபர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இது கவர்னரின் விழா, இதை கடைப்பிடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். இது தான் எங்களுக்கு ராஜ்பவனில் இருந்து அளிக்கப்பட்ட தகவல். இது தான் உத்தரவு. குடியரசுத் தலைவருக்கும், கவர்னர் நிகழ்ச்சிக்கும் இது தான் பாடப்பட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு என்றார்.

* டிஜிபி, நீதிபதிக்கு முனைவர் பட்டம்
பட்டமளிப்பு விழாவில் தமிழக போலீஸ் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் போலீஸ் மேலாண்மை (குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல்) பிரிவிலும், மும்பை தெற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் ராக சுதா (மேலாண்மை படிப்பில்), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சார்பு நீதிமன்ற சீனியர் சிவில் நீதிபதி திரிவேணி மனித உரிமை பிரிவிலும் பிஎச்டி பட்டம் பெறுகின்றனர்.

Related Stories: