ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000திற்கு அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடு கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றிவளைத்து பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அந்த படகில் இருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீனவர்களை ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்களை போலீசார் வவுனியா சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களையும் படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரியை வலியுறுத்தி இன்று, நாளை, நாளை மறுநாள் மூன்று தினங்கள் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. 600க்கும் மேற்பட்ட விசை படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: