தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் கனிம வளங்கள் கடத்தப்படுவதால் அதிர்ச்சி

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் கனிம வளங்கள் கடத்தப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி பகுதிகளில் உள்ள குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு எம்.சாண்ட், ஜல்லி, கற்கள் கடத்தப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, எம்-சண்ட், ஜல்லி கற்கள் மற்றும் பெருங்கற்கள் போன்ற கனிம வளங்கள் குவாரிகளிலிருந்து தொடர்ச்சியாக லாரிகள் மூலமாகச் கடந்த சில ஆண்டுகளாகக் கேரளாவிற்குக் கடத்தப்பட்டு வருகின்றன.

தென்காசியிலிருந்து கேரளா செல்வதற்கான பிரதானப் பாதையாகப் புளியரைச் சாலை விளங்குகிறது. இப்பகுதியிலிருந்து எம்-சண்ட், ஜல்லி மற்றும் பெருங்கற்கள் போன்ற கனிம வளங்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக லாரிகள் மூலம் கேரளத்திற்குக் கடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், விதிமுறைகளை மதிக்காமல் இரண்டு யூனிட் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிச் சீட்டை (Pass) மட்டும் பெற்றுக்கொண்டு, ஒரே வாகனத்தில் பத்து யூனிட் வரை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் நிலை தொடர்கிறது. இதன் காரணமாக, நாள்தோறும் டன் கணக்கில் மணல், எம்-சண்ட் மற்றும் ஜல்லி கற்கள் போன்ற கனிம வளங்கள் எல்லையற்ற அளவில் கடத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய கனிம வளக் கடத்தல் புளியரைச் சாலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதேபோன்று கனிம வளங்கள் கேரளாவிற்குத் தடையின்றிச் கடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடத்தல் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், அச்சாலை வழியாகச் செல்ல முடியாத வாகனங்கள் அனைத்தும் தென்காசி புளியரைச் சாலையை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஏராளமான லாரிகள் இங்கிருந்து கனிம வளங்களைச் சட்டவிரோதமாகக் கேரளாவிற்குக் கடத்திச் செல்கின்றன.

Related Stories: