பெரம்பூர்: மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து ஓட்டேரியில் விற்பனை செய்ய முயற்சி செய்த வழக்கில் தாய், மகன் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார் 2400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் தொடர்ந்து போதை மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தொடர்ந்து சென்னைக்குள் வந்த வண்ணம் உள்ளன. போலீசார் எவ்வளவு பாதுகாப்புகளை போட்டாலும் அதனை மீறி போதைப் பொருட்களை தொடர்ந்து சிலர் சென்னைக்குள் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஓட்டேரி பகுதியில் மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்ட போதை மாத்திரைகள் பெருமளவில் சிக்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியில் அடிக்கடி இளைஞர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு வந்து போதை மாத்திரைகளை வாங்கி செல்வதாக தலைமைச் செயலக குடியிருப்பு இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தொடர்ந்து போலீசார் சந்தேகத்திற்கிடமானவர்களை கண்காணித்து வந்தனர்.
அதன்படி நேற்று காலை ஓட்டேரி பழைய வாழை மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகளை பிரிப்பதாக இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் மற்றும் அவரது தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றனர். அங்கு பெட்டி பெட்டியாக போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் அந்த வீட்டில் இருந்து 2400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அந்த வீட்டில் இருந்த மூன்று பேரையும் போலீசார் காவல் நிலையம் வைத்து சென்ற விசாரணை நடத்தியதில், ஓட்டேரி பழைய வாழை மாநகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (24), அவரது தாயார் புஷ்பா (45) மற்றும் ஆகாஷின் நண்பர் பெரம்பூர் சீனிவாசன் ஆச்சாரி தெரு பகுதியைச் சேர்ந்த ராஜி (20) என்பது தெரிய வந்தது. இவர்கள் மூன்று பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பைக்குச் சென்று அங்கு 42 ஆயிரம் ரூபாய் கொடுத்து 2,400 வலி நிவாரண மாத்திரைகளில் வாங்கி வந்து ஆகாஷ் வீட்டில் வைத்து பிரிக்கின்ற போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
ஆகாஷ் மற்றும் அவரது தாயார் புஷ்பா மும்பையில் சிறிது காலம் வசித்து வந்துள்ளார். புஷ்பா நன்றாக இந்தி பேசுவார் என்ற காரணத்தினால் ஆகாஷ் தனது தாயாரை அழைத்துச் சென்று போதை மாத்திரைகளை வாங்கி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த மாத்திரைகளை ஒரு மாத்திரை 100 ரூபாய் என இவர்கள் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த தலைமைச் செயலக காலனி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
