- திருப்பத்தூர்
- சென்னை உயர் நீதிமன்றம்
- உச்ச நீதிமன்றம்
- டிவிகே
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வெற்றி கலகம்
- ஸ்ரீநிவாச சேதுபதி
- சிவகங்கை மாவட்டம்
- திமுக
- அமைச்சர்
- பெரியகருப்பன்
- திருப்பத்தூர்...
புதுடெல்லி: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி அதே தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு அனுப்ப வேண்டிய தபால் வாக்குகள் மாறாக திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறி பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘‘மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்’’ என்று கோரிக்கையை வைத்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, தமிழக சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் வாக்களிக்க திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து ஆணை பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தேவையில்லை. எனவே வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். மேல்முறையீட்டு மனுதாரரான சீனிவாச சேதுபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘சென்னை உயர்நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், அதேப்போன்று சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் பிறப்பித்த உத்தரவு மிகவும் தவறான ஒன்றாகும்.
எங்களது தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை முறையாக கருத்தில் கொள்ளாமல் அவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அப்படி ரத்து செய்யும் பட்சத்தில் தான் இந்த வழக்கு சரியான ஒரு பாடமாக அமையும்’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் பெரியகருப்பன் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்று அவர்களது தரப்பு வழக்கை வாபஸ் பெற உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது. மேலும் உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை ரத்து செய்ய முடியாது. இரு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தை அணுகலாம். அங்கிருக்கும் வழக்கை சட்டத்திற்கு உட்பட்டு விரிவாக விசாரித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.
அதேப்போன்று இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை நீக்கம் செய்கிறோம்’’ என்று தெரிவித்த நீதிபதிகள், த.வெ.க வேட்பாளர் சீனிவாச சேதுபதி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதில் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய தவெக வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
