டெல்லி: 2023-ஆம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோலால் 3 முதல் 5 சதவீதம் மைலேஜ் குறைய வாய்ப்பு உள்ளது என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது. ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவை தற்போதிருக்கும் 20%-க்கும் மேல் உயர்த்துவது குறித்து ஒன்றிய அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் அந்த பதிலில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிக அளவிலான எத்தனால் கலப்பு தொடர்பான எதிர்கால முடிவுகள், விரிவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனான ஆலோசனைகளுக்குப் பிறகே எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. E20 என்பது புதிதாகவோ அல்லது திடீரெனவோ அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் அல்ல, உலகளவில் சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போக்குவரத்து எரிபொருளாக எத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டம் 2001-ல் ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டது எனவும் அமைச்சர் சுரேஷ் கோபி குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக கடந்த 2013-14-ல் 1.53 சதவீதமாக இருந்த கலப்பு விகிதம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2025-26-ல் 20 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், E20-க்கு மாறுவது என்பது படிப்படியாக திட்டமிட்டு ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தின் பலன்களை குறைக்க கூடும் என்பதால் எத்தனால் கலக்காத பெட்ரோலை தனியாக விற்க வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் கூறி இருக்கிறார்.
