விருதுநகர், ஜூலை 21: வில்லிபுத்தூர் மம்சாபுரம் பகுதியில் 3 மகளிர் குழுக்கள் முறையாக கடன்களை திரும்ப செலுத்தாத காரணத்தைக்கூறி, கடன்களை கட்டி முடித்த மீதமுள்ள 7 குழுவினரிடம் பணத்தை கட்ட வேண்டும் என தேசிய மயமாக்கப்பட்ட வங்கி நிர்பந்தம் செய்வதாக மகளிர் சுய உதவி குழுவினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
மனுவில், ‘‘வில்லிபுத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட மம்சாபுரத்தில் 10 மகளிர் குழுக்களை இணைத்து சிகரம் என்ற பகுதி அளவிலான கூட்டமைப்பு அமைக்கப்பட்டது. இக்குழுக்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.2 கோடி கடனை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வழங்கியது. இதில் 7 மகளிர் குழுக்கள் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் பணத்தை முறையாக ரூ.60 லட்சத்து 30 ஆயிரம் வரை வங்கியில் செலுத்தியுள்ளோம்.
அதேநேரம் மீதமுள்ள 3 மகளிர் குழுக்கள் கடன்களை முறையாக செலுத்தவில்லையென கூறப்படுகிறது. அவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையான ரூ.14 லட்சத்து 46,700ஐ ஏற்கனவே கடனை திரும்ப செலுத்திய 7 குழுக்களிடம் வசூலிக்க சம்பந்தப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
