ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிகை நகல்: ஜூலை 27ல் மீண்டும் ஆஜராக உத்தரவு

 

கரூர்: ரூ.100 கோடி நில மோசடி புகார் சம்பந்தமாக, கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிக்கையின் நகலை பெற்று கொண்டார். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக கரூர் சார்பதிவாளர், டவுன் காவல் நிலையத்தில், 2024 ஜூன் 14ம்தேதி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இவரது தம்பி சேகர், இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ், யுவராஜ் உட்பட 17 பேர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஏற்கனவே 16 பேர் குற்றப்பத்திரிகை பெற்றுச்சென்றனர். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜராகி வழக்கு சம்பந்தப்பட்ட குற்றப்பத்திரிக்கை நகலை பெற்று கொண்டார். அடுத்த விசாரணைக்காக ஜூலை 27ம்தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என அவருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: