சென்னை: வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்ந்துள்ளதன் எதிரொலியாக, கடமையில் அலட்சியம் காட்டும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த காலங்களைக் காட்டிலும் இந்த மாதம் ஏராளமான வீடுகளுக்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளதாகப் புகார்கள் சமூக வலைதளங்களில் கூறப்பட்டது. மேலும், மின் பயன்பாடு அளவீடு செய்வதில் தாமதம் உள்ளது மற்றும் இலவச மின்சாரச் சலுகை மறுக்கப்படுகிறது போன்ற புகார்களைப் பொதுமக்கள் முன்வைத்தார்கள். இது ஒருபுறம் இருக்க, தவறான மீட்டர் அளவீடுகள், பழுதடைந்த மீட்டர் மற்றும் கணக்கீட்டுச் செயல்முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக வீடுகளுக்குத் தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் விதிக்கப்படுவதாகவும், அதனால் பொதுமக்கள் சிரமத்தையும் நிதி இழப்பையும் சந்திக்கிறார்கள் என நிதிப் பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அனைத்து மேற்பார்வைப் பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், நுகர்வோர் குறைகள் மற்றும் வருவாய் இழப்பு ஆகியவற்றைத் தவிர்க்கப் கட்டணக் கணக்கீட்டில் தவறு ஏற்படாமல் இருப்பது, கடுமையான கள ஆய்வுகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கைகள் மற்றும் நுகர்வோர் புகார்களின் அடிப்படையில், வருவாய் மேற்பார்வையாளர்கள், கணக்கீட்டு மேற்பார்வையாளர்கள், உதவி கணக்கு அதிகாரிகள் மற்றும் பிற கணக்கீட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் களச் சரிபார்ப்பு போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மின் பகிர்மான வட்ட அளவில் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றும், பழுதடைந்த மீட்டர்கள் பெரும்பாலும் ஆரம்பத்திலேயே கண்டறியப்படாததால், நுகர்வோர் புகார் அளிக்கும் வரை கட்டணப் பிழைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்லியமான கட்டண முறையை உறுதி செய்யவும், நுகர்வோர் திருப்தியை மேம்படுத்தவும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தலைமையகத்திலிருந்து மீண்டும் மீண்டும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், இத்தகைய குறைபாடுகள் தொடர்ந்து நீடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையைச் சரிசெய்ய, அனைத்து வட்டங்களிலும் அவ்வப்போது திடீர் ஆய்வுகள் மற்றும் விரிவான சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், கணக்கீட்டுப் பணியாளர்கள் மின்மானி அளவீடுகளைக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆய்வு அதிகாரிகளின் செயல்பாடுகள் ஆவணப்படுத்தப்பட்டுத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடமையில் அலட்சியம் காட்டும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தேவையானால் ஒழுங்கு நடவடிக்கை உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் விரைவான, துல்லியமான மற்றும் நுகர்வோர் நட்பு ரீதியிலான கட்டண முறையை உறுதி செய்வதற்காக, வட்டம், கோட்டம் மற்றும் உட்கோட்ட அளவிலான அதிகாரிகளுக்குத் தெளிவான பொறுப்புகளை ஒதுக்குமாறும் மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு அந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடுமையான பணியாளர் பற்றாக்குறையே இத்தகைய தொடர் கட்டணப் பிழைகளுக்குக் காரணம் என்று ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய தமிழ்நாடு மின்சார ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். கண்ணன் கூறுகையில், 7,565 மதிப்பீட்டாளர் பணியிடங்களில் கிட்டத்தட்ட 60 சதவீதமும், 3,961 மதிப்பீட்டு ஆய்வாளர் பணியிடங்களில் சுமார் 42 சதவீதமும் காலியாக உள்ளன. மதிப்பீட்டாளர்கள் வீடு வீடாகச் சென்று மீட்டர் அளவீடுகளை எடுக்கும் பொறுப்பில் உள்ளனர். அதே நேரத்தில் ஆய்வாளர்கள் அந்தச் செயல்முறையை மேற்பார்வையிடுகின்றனர். கடுமையான காலிப்பணியிடங்கள் காரணமாக, ஆய்வாளர்களே மீட்டர் அளவீடுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே சமயம், களப்பணியைக் கண்காணிக்க வேண்டிய வருவாய் மேற்பார்வையாளர்கள், மண்டல அலுவலகங்களில் கட்டண வசூலுக்காகப் பணியமர்த்தப்படுகின்றனர். மீட்டர் அளவீட்டுப் பணிகள் அதிகளவில் வெளி நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால், பிழைகள் அதிகரிக்கின்றன. இந்தக் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாவிட்டால், இந்தப் பிரச்சினைகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வழக்கமான நியமனங்கள் செய்யப்படும் வரை மீட்டர் அளவீட்டுப் பணிகளுக்குக் கள உதவியாளர்களைப் பணியமர்த்துவது குறித்து நிறுவனம் பரிசீலித்து வருவதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
