×

மாமல்லபுரம் நகராட்சியில் 334 தெருநாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் கடி தடுப்பூசி: 86 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நகராட்சியில் 334 தெருநாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 86 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நகராட்சியில் உள்ள அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாமல்லபுரம் நகராட்சியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், நாய்களின் நடமாட்டத்தால், பகல் மற்றும் இரவு நேரங்களில் தெருக்களில் நடமாட முடியாத நிலை உள்ளதாகவும், சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், முதியோர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் விபத்து ஏற்படுவதாகவும், தெரு நாய்களை பிடித்து கருத்தடைசெய்ய வேண்டும், வெறிநாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகளின் மண்டல இயக்குனர் மாரிச்செல்வி அறிவுறுத்தலின் பேரில், மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் அபர்ணா தலைமையில், நகராட்சி தூய்மை ஆய்வாளர் குருசாமி முன்னிலையில், மெர்ஸி கிராஸ் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், நகராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள தெருக்களில் பொதுமக்களுக்கு நாய்களால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு வெறிநாய் கடி தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கால்நடை மருத்துவர் ராஜேஷ் பாபு குழுவினர் மூலம் மொத்தம் 334 தெரு நாய்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டது. மேலும், 86 நாய்களுக்கு கருத்தடை அறுவை கிச்சையும் செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் நகராட்சிக்கு பெண் ஆணையராக அபர்ணா பொறுப்பேற்றத்தில் இருந்து, பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின், கோரிக்கைக்கு செவிசாய்த்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் ஆணையர் அபர்ணாவை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் வெறிநாய் கடி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மாமல்லபுரம் நகராட்சியில் இதுவரை 86 தெரு நாய்களுக்கு கருத்தடையும், 334 தெரு நாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் கடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, நகராட்சியில் உள்ள அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேளம்பாக்கம், படூர், தையூரில் தொடரும் தெரு நாய் தொல்லை: பொதுமக்கள் அச்சம்

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம், தையூர், சாத்தங்குப்பம் ஊராட்சிகள் மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்தபடி உள்ளன. அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த 3 ஊராட்சிகளில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளில் கலைக்கல்லூரி, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் தொகையும் கணிசமாக அதிகரித்து உள்ளது.

இந்த மூன்று ஊராட்சிகளிலும் தெரு நாய்கள் அதிகமாக உள்ளன. விலங்கு ஆர்வலர்கள் பலரும் நாய்களுக்கு பிஸ்கட் மற்றும் உணவுகளை வாகனங்களில் எடுத்து வந்து போடுகின்றனர். இவை முறையாக கட்டுப்படுத்தப்படாததால் தற்போது ஆயிரக்கணக்கில் பெருத்து விட்டன. இதனால் ஒவ்வொரு தெருக்களிலும் 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவ்வாறு சுற்றித்திரியும் நாய்கள் உணவுக்காக ஒன்றையொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால் சாலையில் செல்லும் பள்ளிக்குழந்தைகள், பெண்கள், முதியோர் ஒரு வித பயத்துடனே சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், பல நாய்க்குட்டிகளில் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. இவை முறையாக அப்புறப் படுத்தப்படாததால் தொற்று நோய் பரவும் அச்சம் உள்ளது. எனவே, புளூகிராஸ் போன்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தையூர், கேளம்பாக்கம், படூர் ஊராட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதிகளில் தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Mamallapuram Municipality ,Mamallapuram ,
× RELATED ஆவின் நெய் விலை உயர்வு வாபஸ்