சென்னை: கடந்த 15ம் தேதி முதல் ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.37 உயர்த்தப்பட்டு ரூ.690க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் நுகர்வோர், வணிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நெய் விலை உயர்வு திரும்பப்பெறப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்ட விளக்க அறிக்கை: ஆவின் நிறுவனம் நெய்யின் மொத்த விற்பனையாளர்களுக்கான லாப வரம்பைக் குறைத்து, அதன் காரணமாக சில்லரை விலை உயர்த்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.
அனைத்து வகையான நெய்களும் தற்போதுள்ள சில்லரை விலையிலேயே நுகர்வோருக்கு தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எந்தவொரு நெய் வகையிலும் விலை உயர்வு மேற்கொள்ளப்படவில்லை. மேலும், மொத்த விற்பனையாளர்களுக்கான லாப வரம்பில் செய்யப்பட்டிருந்த திருத்தம் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த லாப வரம்பே தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
