×

பல நூறு கோடிக்கு சொத்து குவிப்பு; ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி கம்பெனிக்கு ரூ.10 கோடி அபராதம்: தம்பி மற்றும் உறவினர்கள் பெயரில் உள்ள சொத்துகள் குறித்து ஒன்றிய அரசு விசாரணை

 

சென்னை: சென்னையில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, தனது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பல நூறு கோடிக்கு சொத்துகள் வாங்கி குவித்திருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி நிறுவனத்துக்கு ரூ.10 கோடியும், தம்பியின் நிறுவனத்துக்கு ரூ.7 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ள தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ஒளிமயமான அதிகாரி. எப்போதும் செல்வாக்கான துறைகளில் பணியாற்றியவர், கடந்த 2 மாதமாக டம்மியான பதவியில் பணியாற்றி வருகிறார். இந்த டம்மி பதவியிலும் தனது கைவண்ணத்தை அவர் காட்டி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அவரைப் பற்றி வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஐஏஎஸ் அதிகாரி, பாலவாக்கம் அண்ணா தெருவில் அதாவது கடற்கரையை ஒட்டிய பகுதியில் 2017ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி 5730 சதுர அடி நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் அப்போதைய வழிகாட்டி மதிப்பு மட்டும் ரூ.2 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம். ஆனால், உண்மையான சந்தை மதிப்பு மேலும் ரூ.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலத்தை தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் வாங்கியுள்ளார். அவர் வசிக்கும் வீட்டின் பக்கத்தில் நீதிபதி அப்துல் குத்தூசிற்கு சொந்தமான 2550 சதுர அடி நிலத்தை 2024 டிசம்பர் 12ம் தேதி அவரது மனைவியின் பெயரில் வழிகாட்டி மதிப்பின்படி ரூ.4 கோடிக்கு வாங்கியுள்ளார். ஆனால் சந்தை மதிப்பு ரூ.7 கோடிக்கும் அதிகமானது.

அதற்கு அருகில் ராகவா, நவீன் கிருஷ்ணா என்பவர்களுக்கு சொந்தமான 3699 சதுர அடி நிலத்தை வழிகாட்டி மதிப்பின்படி ரூ.3 கோடிக்கு 2925 சதுர அடி நிலத்தை அக்டோபர் 30ம் தேதி வாங்கியுள்ளார். ஆனால் இந்த இடத்தின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.6 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த 3 இடங்களும் அருகருகே அமைந்துள்ளன. அதன் அருகில் உள்ள 4 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது.

இந்த நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.4 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலத்தை அவரது தம்பி பிரதீப் பெயரில் வாங்கியுள்ளனர். இந்த 4 இடத்திலும் தற்போது கட்டிடங்கள் உள்ளன. ஒரு இடத்தில் உயர்ரக கோழிகளையும், வான்கோழிகளையும் வளர்த்து வருகிறார். அவரது பெயர் மற்றும் மனைவியின் பெயரில் வாங்கிய இடத்தில் மட்டும் அவர் சொகுசு பங்களா கட்டியுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதியிடம் இருந்தும் வீடு மற்றும் இடத்தை வாங்கியுள்ளார்.

இந்த இடத்தை அவர் அரசிடம் முறையான அனுமதி பெற்று வாங்கினாரா என்பது உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சமிட் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.300 கோடிக்கு பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாக கணக்கு காட்டி வருகின்றனர். அதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக கணக்கு காட்டி வருகின்றனர்.

ஆனால் ஐஏஎஸ் அதிகாரியின் கம்பெனி எங்கு உள்ளது என்று பார்த்தால், அது அவரது வீட்டிலேயே ஒரே ஒரு அறையில் இயங்கி வருகிறதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாம். ஆண்டுக்கு ரூ.300 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் கம்பெனியில் குறைந்தது பல ஊழியர்கள் வேலை செய்திருப்பார்கள். அந்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்கப்படிருக்கும். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இஎஸ்ஐ, பிஎப் பிடிக்கப்பட்டிருக்கும் என்று விசாரித்தால் அப்படி யாரும் வேலை செய்ததாக இதுவரை ஒருவருக்கு கூட சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஊழியர்களே இல்லாமல், ஊழியர்களுக்கு ஒரு பைசா கூட சம்பளம் கொடுக்காமல் அப்படி என்னதான் வியாபரம் செய்தார்கள் என்று பார்த்தால், ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி நடத்தும் கம்பெனியில் இருந்து அவரது தம்பி கம்பெனிக்கு வியாபாரம் செய்துள்ளனர். தம்பியின் நாதன் கோல்டிங்க்ஸ் என்ற கம்பெனிக்கு வியாபாரம் செய்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனம்தான் வெளிநாட்டுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதாகவும் கணக்கு காட்டியுள்ளனர். இரு கம்பெனியிலும் அப்படி ஒரு வியாபாரமோ, பண பரிவர்த்தனையோ நடைபெற வில்லை. வெறும் ஏட்டில் மட்டுமே அவை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல்களை ஆய்வு செய்த தமிழக வணிகவரித்துறை ஆணையர் நாகராஜ், ஏதோ முறைகேடு நடைபெற்றிருப்பதை உறுதி செய்துள்ளார். இதனால் தீவிரமாக ஆய்வு செய்ததில், முதல் கட்டமாக ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி கம்பெனிக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளார். மனைவியின் தம்பி கம்பெனிக்கு ரூ.7 கோடி அபராதம் விதித்துள்ளார். இது ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதை தவிர மனைவியின் தம்பி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பல் மருத்துவமனை வைத்துள்ளார். ஆனால் பல் மருத்துவமனையை விட கந்து வட்டிக்குத்தான் அதிகமாக கொடுத்துள்ளாராம். அதாவது சொத்து ஆவணங்களை கொடுத்தால் 3 சதவீத வட்டியும், சொத்து ஆவணங்களை கொடுக்காமல் கடன் வாங்கினால் 5 சதவீத வட்டியும் விதிக்கப்படுகிறதாம். அதில் பணம் கொட்டுகிறதாம். அதோடு மருத்துவமனையே ஐஏஎஸ் அதிகாரியின் ஊழல் பணத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு பெருந்துறையில் பண்ணை வீடு, தோட்டம், தென்னந்தோப்பு என்று மற்றும் சில நிறுவனங்கள் என பல கோடிக்கு சொத்துகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த அதிகாரியின் மனைவியிடம் மட்டுமே 300 கிலோவுக்கு தங்க நகைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மனைவியின் சொந்த ஊரில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றிருப்பதாகவும், அவர்கள் பூர்வாங்க விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு தமிழக அரசுக்கும் புகார்கள் சென்றுள்ளதால், அவர் மீது விசாரணை நடத்தும்படி உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சினிமா கட்டண உயர்வுக்கு கமிஷன்

தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் முக்கியமான பதவிகளை அவர் பிடித்து விடுவார். தற்போது சீனியர் ஐஏஎஸ் அதிகாரியான அவர், டிஆர்ஓ கேடரில் உள்ள பதவியில் 2 மாதமாக டம்மியாக்கப்பட்டுள்ளாராம்.. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் அவருக்கு மேல் உள்ள அதிகாரி விடுமுறையில் சென்றுள்ளார். அப்போது பொறுப்பு அதிகாரியாக இருந்தவருக்கு திருச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள 8 தியேட்டர்களுக்கான கட்டணம் ரூ.250ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்தும் பைல் வந்துள்ளது.

இந்த பைலில் உடனடியாக கையெழுத்திடும்படி தலைமைச் செயலகத்தில் இருந்து அவருக்கு உத்தரவு வந்துள்ளது. அந்த தியேட்டர் உரிமையாளர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ளவரையும், ஐஏஎஸ் அதிகாரியையும் கவனித்து விட்டதால் உடனடியாக கட்டண உயர்வுக்கான பைலில் கையெழுத்துப் போட்டு அனுப்பியுள்ளாராம். டம்மி பதவியிலும், அதிலும் பொறுப்பு பதவியிலும் அதிகாரி தனது கை வண்ணத்தை காட்டுகிறாரே என்று வாயை பிளக்கிறார்களாம் அதிகாரிகள்.

Tags : IAS ,Union government ,Chennai ,IAS… ,
× RELATED சென்னையில் தேனாம்பேட்டை,...