×

போர்டு நிறுவனத்தின் உயர்மட்ட குழுவினர் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு; மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அறிவித்த கார் இன்ஜின் உற்பத்தி விரைவில் தொடக்கம்: அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என தமிழக அரசு அறிவிப்பு

 

சென்னை: உலகின் முன்னணி கார் நிறுவனமான போர்டு, அமெரிக்காவில் உள்ள மிச்சிகனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனம் சென்னைக்கு வர மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் எடுத்த முயற்சிகள்தான் காரணம். ஜெயலலிதா ஆட்சியில்தான் போர்டு கார் தொழிற்சாலை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1995ம் ஆண்டு ரூ.1,700 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 350 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலையை அமைத்த இந்த நிறுவனம் 1996ல் முதல் காரை வெளியிட்டது. முதலில் மகிந்திரா நிறுவனத்தோடு இணைந்து செயல்பட்ட இந்த நிறுவனம், 1998ல் தனியாக செயல்பட தொடங்கியது. அப்போது மேற்கொள்ளப்பட்ட தொழிற்சாலை விரிவாக்கத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார்.

அவர் அளித்த பல சலுகைகளால் இந்த தொழிற்சாலையில் 3 ஷிப்டுகளில் வேலை நடந்து, பலவித பெயர்களிலான கார்கள், கார் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு உலகிலுள்ள 37 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மீண்டும் 2009ல் ரூ.1,500 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதையும் கலைஞர் தொடங்கி வைத்தார். இதன்மூலம் ஒரு லட்சமாக இருந்த கார்களின் உற்பத்தி 2 லட்சமாக உயர்ந்தது. இதுதவிர, ஆண்டுக்கு 2 லட்சம் கார் இன்ஜின்களையும் தயாரிக்க தொடங்கியது.கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த நிறுவனம் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்தது.

இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இதையடுத்து 2021ம் ஆண்டு தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இவர் ஆட்சியில், தமிழகத்தில் புதிய புதிய தொழிற்சாலைகள் வர ஆரம்பித்தது. இதன்மூலம் தமிழகத்தில் படித்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ேவலைவாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில்தான் 3 ஆண்டுகளாக மூடிக்கிடந்த போர்டு நிறுவனம் மீண்டும் திறக்கப்பட வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அப்போதைய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு உத்தரவிட்டார். அவரும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்று அங்குள்ள பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதன்படி, அமெரிக்க பயணத்தின் முக்கியமான ஓர் நிகழ்வாக, உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான போர்டு மோட்டார்ஸ் உடனான, தமிழகத்தின் 30 ஆண்டுக்கால உறவை புதுப்பிப்பது தொடர்பாகவும், மீண்டும் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்தும் அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கினால், அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாக மு.க.ஸ்டாலின் போர்டு நிறுவன உயர் அதிகாரிகளிடம் உறுதி அளித்தார். அவரின் உறுதியை ஏற்று, தமிழகத்தில் மீண்டும் தொழிற்சாலையை தொடங்க போர்டு நிறுவனம் உறுதி அளித்தது. அதன்படி, போர்டு நிறுவனம் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மறைமலைநகரில், அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் உற்பத்தி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் கையெழுத்தானது. இதை தொடர்ந்து அதற்கான பணிகளில் போர்டு நிறுவனம் கடந்த ஒரு ஆண்டாக ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, இந்நிறுவனம், தமிழ்நாட்டில் தனது உற்பத்தி திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது நிறுவியுள்ள உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும், இனிவரும் காலங்களில், உற்பத்தி துறையில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்க திட்டங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போதுதான், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட மறைமலைநகர் உற்பத்தி சாலையை முழு அளவிற்கும் பயன்படுத்திடும் வகையில் போர்டு நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்க திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும். இந்த உற்பத்தி திட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், போர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிமோனெட்டா வெர்டி, போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு இயக்குநர் தீரஜ் தீக்‌ஷித், ராஜா விமலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Ford ,CM Vijay ,MK Stalin ,Tamil Nadu government ,Chennai ,Michigan, USA ,Chief Ministers ,Jayalalithaa ,Karunanidhi ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி...