ஜம்மு: மோசமான வானிலை காரணமாக ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் திரிகுடா மலை உச்சியில் புகழ் பெற்ற ஸ்ரீவைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 30,000 முதல் 40,000 யாத்ரீகர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்து விட்டனர். இதையடுத்து ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோயில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஜூலை 23 வரை கன மழை பெய்ய, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்து. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோயிலுக்கு யாத்திரை செல்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார். இதன் காரணமாக பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
