ஜெய்ப்பூர்: கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மாநிலங்களவை எம்.பி.க்களின் சம்பளம், பல்வேறு படிகள் மற்றும் வசதிகளுக்காக ரூ.262 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பெறப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது. சந்திரசேகர் கவுர் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவுக்கு மாநிலங்களவைச் செயலகம் அளித்துள்ள பதில்:
கடந்த 2024-25-ம் நிதியாண்டில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக ரூ.98 கோடிக்கு மேல் செலவிடப்பட்டது. இது 2025-26-ம் ஆண்டில் ரூ.163 கோடியாக கணிசமாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டை விட இது ரூ.65 கோடி உயர்வாகும். இந்தத் தொகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள், அலுவலகச் செலவுகள் மற்றும் மருத்துவச் செலவுகள் ஆகியவை அடங்கும்.
குறிப்பாக, 2024-25-ம் நிதியாண்டில் எம்.பி.க்களின் சம்பளத்திற்காக ரூ.25.71 கோடியும், மருத்துவச் செலவுகளாக ரூ.8.2 கோடியும், பயணச் செலவுகளாக ரூ.24.99 கோடியும், பல்வேறு படிகளாக ரூ.33.33 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இதேபோல், 2025-26-ம் நிதியாண்டில் சம்பளமாக ரூ.44.6 கோடியும், மருத்துவச் செலவுகளாக ரூ.9.6 கோடியும், பயணச் செலவுகளாக ரூ.36 கோடியும், படிகளாக ரூ.58.78 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு மொத்தம் 21 பிரிவுகளின் கீழ் செலவினங்கள் செய்யப்படுகின்றன. இவற்றில் முக்கியமாக சம்பளம், படிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணம், மருத்துவச் செலவுகள் மற்றும் அலுவலகச் செலவுகள் உள்ளிட்டவை அடங்கும் என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
