சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு 2 லட்சத்து 75 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதனை தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்து விவசாயிகள், அமைச்சரிடம் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு ரூ.55 வசூலிக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை வைத்தனர். இதற்கு அமைச்சர் பணம் வசூலிப்பதை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்கு பிறகு கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று பதில் அளித்தார். லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் சஸ்பெண்ட்: கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் வேல்முருகனை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
