சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் பத்திரப்பதிவில் வருவாயை அதிகரித்தோம். ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த 60 நாட்களில் பத்திரப்பதிவில் மோசடி நடந்துள்ளது என முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள கோயில், வக்பு வாரிய, நீர்நிலை புறம்போக்கு சொத்துகள் அனைத்தும் பதிவு செய்யக்கூடாது என ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும், அப்பகுதி சொத்துகள் தொடர்பான குறிப்பாணையில் இருக்கும்.
அதை மீறி பதிய முடியாது. பழநி முருகன் கோயில் சொத்து பதிவு விவகாரத்தில் அங்கிருந்த சார்பதிவாளரை விடுப்பில் அனுப்பிவிட்டு, பொறுப்பு சார்பதிவாளர் மூலம் பதிவு நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான கேள்விகளை தவெக அரசின் சட்ட அமைச்சரும், நிழல் முதலமைச்சருமான நிர்மல்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டால், அவர் அதற்கு பதிலளிக்காமல், திசைதிருப்பும் வகையில் கடந்த கால திமுக ஆட்சி மீது பழி போடுகிறார். குறிப்பாக ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் நான் ஆட்களை நியமித்து வசூலித்ததாக கூறுகிறார்.
ஆதாரம் ஏதுமின்றி பொத்தாம் பொதுவாக மக்களை திசை திருப்புவதற்காக திமுக மீது தொடர்ந்து பழி சுமத்துகிறார். தமிழ்நாட்டில் 589 சார்பதிவாளர் அலுவலகங்களில், நான் அமைச்சராக இருந்தபோது, எங்கு எனது தலையீடு இருந்தது என்பதை ஆதாரத்துடன் அவர் கூற வேண்டும், கடந்த 2021 வரை அப்போதைய அதிமுக அரசில் பத்திர பதிவுத்துறை வருமானம் ரூ.10 ஆயிரம் கோடிதான்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஐந்தாண்டுகளில் ரூ.25 ஆயிரம் கோடி அளவிற்கு உயர்ந்தது. வணிகவரித்துறையில் ரூ.94 ஆயிரம் கோடியாக இருந்த வரி வருவாய், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் ரூ.1 லட்சத்து 40ஆயிரம் கோடி வரை உயர்ந்தது. தவெக அரசில் ஒரு பைசாவும் லஞ்சம் இருக்காது என்றார்கள். ஆட்சிக்கு வந்த 60 நாட்களிலேயே பத்திரப்பதிவில் மோசடி நடந்ததாக புகார் எழுந்து, தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் நிர்மல்குமாரின் துறையிலேயே அரசு வழக்கறிஞர்கள் நியமிப்பதில் முறைகேடு புகாரில், அவரது கட்சி வழக்கறிஞரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அவர் தற்போது அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். தவெகவில் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் சிலர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரையிலும் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் எதற்கும் திமுக அரசின் மீது பழிபோடுவதிலேயே குறியாக உள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.
