சென்னையில் இ-பேருந்துகளில் தொடர் பழுது தனியார் நிறுவனத்திற்கு ரூ.9.5 கோடி அபராதம்

சென்னை: சென்னையில் இயக்கப்படும் மின்சாரப் பேருந்துகளில் தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு மாநகரப் போக்குவரத்து கழகம் ரூ.9.5 கோடி அபராதம் விதித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலின்படி, கடந்த 2025-26 நிதியாண்டில் சேவை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாத காரணத்திற்காக, மின்சாரப் பேருந்துகளை இயக்கும் ‘ஓம் குளோபல் மொபிலிட்டி’ நிறுவனத்திடமிருந்து இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது

சென்னையில் மொத்தம் 625 ஏசி மற்றும் ஏசி அல்லாத மின்சாரப் பேருந்துகள் 12 ஆண்டு கால மொத்தச் செலவு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நிறுவனத்தால் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஏசி பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.80.86 வீதமும், ஏசி அல்லாத பேருந்துகளுக்கு ரூ.77.16 வீதமும் எம்டிசி நிறுவனம் கட்டணம் வழங்குகிறது. மேலும், ஒரு பேருந்து ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 200 கிலோமீட்டர்கள் இயக்கப்பட வேண்டும் என்பதும் விதிமுறையாகும்.

ஆர்டிஐ பதிலின்படி, கடந்த நிதியாண்டில் எம்டிசி நிறுவனம் இந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.80.60 கோடி தொகையை வழங்கியிருந்தாலும், சேவைத் தரக் குறைபாடுகளுக்காக ரூ.9.51 கோடி தொகையை அபராதமாகப் பிடித்துக் கொண்டுள்ளது. மின்சாரப் பேருந்துகளில் ஏற்பட்ட பழுதுகளின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜூன் 2025ல் பூஜ்ஜியமாக இருந்த பழுதுகளின் எண்ணிக்கை, ஜூலையில் 97 ஆகவும், ஆகஸ்டில் 99 ஆகவும் உயர்ந்தது. பின்னர் செப்டம்பரில் 154, அக்டோபரில் 213, நவம்பரில் 150, டிசம்பரில் 215 எனத் தொடர்ந்து அதிகரித்து, 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரியில் 224, பிப்ரவரியில் 246 ஆக உயர்ந்து, இறுதியாக மார்ச் 2026ல் 372 என்ற உச்சத்தைத் தொட்டது. இந்த அளவிற்குப் பேருந்துகள் நடுவழியில் பழுதாகி நின்றாலும், அதிர்ஷ்டவசமாக இப்பேருந்துகளால் பெரிய விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை.

ஒப்பந்தத்தின்படி, தனியார் நிறுவனம் தங்களின் பேருந்துச் சேவை இருப்பை 95% முதல் 98% வரை தடையின்றி வழங்க வேண்டும். இதில் தொய்வு ஏற்படும் பட்சத்தில், மாதாந்திர அடிப்படையில் இந்த அபராதத் தொகை கணக்கிடப்பட்டுப் பிடிக்கப்படுவதாக எம்டிசி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பேருந்துகள் பழுதடைந்ததற்கான துல்லியமான காரணங்கள் இந்த ஆர்டிஐ பதிலில் விரிவாகக் குறிப்பிடப்படவில்லை.

Related Stories: