சென்னை: பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்க வலியுறுத்திநேற்று தி.நகர் பாண்டிபஜார் கடைவீதியில் பசுமை தாயகம் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை அன்புமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டு கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய சவுமியா அன்புமணி, சென்னை மிகப்பெரிய நகரம். ஒரு கோடி பேர் இன்றைக்கு இங்கு இருக்கிறார்கள். கூவம் ஆற்று தண்ணீரை குடிக்க முடியாது. 3 ஆறுகள் இருந்தும் சென்னைக்கு தண்ணீர் கிடையாது.
சென்னையில் ஏரி குளம் கிடையாது. ஏரி குளம் இருந்த இடங்களில் அரசே குடியிருப்பை கட்டி விட்டார்கள். எனவே சதுப்பு நிலம்தான் மழைநீரை உறிஞ்சும் ஸ்பான்ஞ். சதுப்பு நிலம் இருந்தால் தான் நிலத்தடி நீர் இருக்கும். குழாயை திறந்தால் தண்ணீர் வர வேண்டும் என்றால் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் தென் சென்னையே வறண்டு விடும். சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்ய வேண்டும்.
நல்ல தண்ணீரை விட்டு விட்டு உப்பு நீரை நன்னீராக்கி குடிக்கிறோம். அதற்கு எவ்வளவு செலவு ஆகும். கழிவு நீரையும் சுத்தம் செய்து பயன்படுத்தும் அவலநிலை வரவேண்டாம். சதுப்பு நிலத்தை காப்பாற்றினால்தான் தண்ணீர் கிடைக்கும்’’ என்றார். பின்னர் அன்புமணி பேசியதாவது: சென்னையின் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பசுமை தாயகத்தின் சர்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. சென்னைக்கு 4 வரங்களை இயற்கை கொடுத்துள்ளது.
அடையாறு ஆறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 3 ஆறும் சென்னைக்கு தண்ணீரை கொண்டு வருகிறது. அந்த 4 வது வரம் அந்த நீரை தேக்கி வைக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 15 ஆயிரம் ஏக்கர் இருந்தது. அதன் பின்பு வீடுகளாக வந்துவிட்டது. தற்போது 15 ஆயிரம் ஏக்கரில் இருந்து 2500 ஏக்கருக்கு வந்துவிட்டது.
அதையும் அழிக்க அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள் சூழ்ச்சி செய்து வருகிறது. வேடந்தாங்கலை விட 4 மடங்கு அதிக பறவை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வருகிறது. அதை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறார்கள். சென்னைக்கு வெள்ளம் வரக்கூடாது என்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் வேளச்சேரி மொத்தமும் சதுப்பு நிலம்.
அதனால்தான் மழை காலங்களில் பாலங்களில் வாகனம் நிறுத்தும் நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள 26,800 ஈர நிலத்தை மறு அறிவிக்கை செய்ய வேண்டும். முதலமைச்சர் விஜய் நேரடியாக இதில் தலையிட்டு சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் சதுப்பு நிலத்தை வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும். வரையறை செய்து அறிவித்தால் அதை ஆக்கிரமிக்க முடியாது. இவ்வாறு பேசினார்.
