ஆயுதங்களை பறிமுதல் செய்து, கைது செய்ய முயன்றபோது ஏட்டு, எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப் பிடிப்பு: குன்றத்தூர், மீஞ்சூர் அருகே பரபரப்பு

சென்னை: குன்றத்தூர் அருகே மண்ணில் புதைத்து வைத்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய முயன்றபோது, ஏட்டுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை எஸ்.ஐ. கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். இதேபோல், மீஞ்சூர் அருகே தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்ய சென்றபோது எஸ்.ஐ.க்கு தலையில் வெட்டு விழுந்தது. தப்பி ஓடிய பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘சென்னை அடுத்த திருமுடிவாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் கருப்பு (எ) தமிழழகன் (26).

இவர் மீது 2 கொலை வழக்கு உள்பட மொத்தம் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் திருமுடிவாக்கம் காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கு ஒன்றில் ரவுடி தமிழழகன் மற்றும் அவரது நண்பரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (எ) சூர்யா (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், குன்றத்தூர் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரி அடுத்த காவனூர் மைதானத்தில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை புதைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் அவர்கள் இருவரும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, இரவு 10 மணிக்கு இருவரையும் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தலைமை காவலர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சென்றதும் ரவுடி தமிழழகன், மண்ணில் புதைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுப்பதுபோல் நடித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமை காவலர் விஜயகுமாரை அரிவாளால் ஓங்கி வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்.ஐ. மணிகண்டன் சுதாரித்துக்கொண்டு, தற்காப்புக்காக கையில் வைத்திருந்த கைத் துப்பாக்கியால் தமிழழகனின் வலது காலில் சுட்டார்.

இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததும் தமிழழகன் கையில் இருந்த அரிவாளை போலீசார் பிடுங்கினர். பின்னர், காயமடைந்த தலைமை காவலர் விஜயகுமார் மற்றும் தமிழழகனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* வில்லிவாக்கத்தை சேர்ந்த போதைப் பொருள் விற்பனை குற்றவாளி பூபாலன், நுங்கம்பாக்கம் சரித்திர பதிவேடு குற்றவாளி சஞ்சய் (எ) ராகுல் ஆகியோர் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் செல்போன் சிக்னல் மூலம் அவர்களை பிடிக்க பின்தொடர்ந்தனர்.

நேற்று முன்தினம் இரவு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், காவலர் மதன்குமார் ஆகியோர் அத்திப்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு முன் பூபாலன் பயன்படுத்திய பைக் இருப்பதை பார்த்து, வீட்டிற்குள் சென்று பூபாலன் மற்றும் சஞ்சய்யை பிடிக்க முயன்றனர். அங்கு பூபாலன், சஞ்சய் மற்றும் 2 பெண்கள் உள்பட 6 பேர் இருந்தனர். திடீரென போலீசார் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், தாங்கள் வைத்திருந்த அறிவாளால் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலையில் வெட்டிவிட்டு, பின்பக்க வழியாக மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.

தலையில் வெட்டுப்பட்ட உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், அத்திப்பட்டில் உள்ள தனியார் கிளினிக்கில் முதலுதவி சிகிச்சை பெற்று பிறகு மீஞ்சூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூன்று தையல்கள் போடப்பட்டது. தகவலறிந்த ஆவடி கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், இணை ஆணையர் சிவக்குமார் மேற்பார்வையில், செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் போதைப்பொருள் விற்பனை குற்றவாளி பூபாலன் மற்றும் நுங்கம்பாக்கம் சரித்திர பதிவேடு குற்றவாளி சஞ்சய் ஆகியோர் அண்மையில் அத்திப்பட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியது தெரிந்தது. தொடர்ந்து சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய 6 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை பிடிக்க சென்ற உதவி ஆய்வாளர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம், மண்ணில் புதைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுப்பதுபோல் நடித்து தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவமும் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

* முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம்
குன்றத்தூர் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகரை கொலை செய்யும் திட்டத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் தமிழழகன் ஈடுபட்டு வந்த தகவல் போலீசாரை அதிர்ச்சி அடைந்த செய்தது. மேலும், திருமுடிவாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடை உரிமையாளர்களை மிரட்டி அவர் மாமூல் வசூலித்து வந்ததும், பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததும் தெரிந்தது. உடனடியாக ரவுடி தமிழழகன் கைது செய்யப்பட்டதால் கொலை சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: