சென்னை: தமிழக மின் நுகர்வு 475 மில்லியன் யூனிட்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் வரலாற்றில், நடப்பு ஜூலை மாதத்தில் தினசரி மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாநிலத்தின் ஒரு நாள் மின் நுகர்வு 475.447 மில்லியன் யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது.
பொதுவாக தமிழ்நாட்டில் ஏப்ரல் மற்றும் மே மாத கோடைக்காலத்தில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த மாதங்களில்தான் மின்சாரத் தேவையும் மின் நுகர்வும் புதிய உச்சங்களை எட்டும். நடப்பு ஆண்டிலும் கடந்த ஏப்ரல் 29 அன்று மாநிலத்தின் உச்ச மின் தேவை 21,307 மெகாவாட்டாகவும், ஒரு நாள் மின் நுகர்வு 471.456 மில்லியன் யூனிட்டுகளாகவும் உயர்ந்து முந்தைய சாதனையாக இருந்தது.
இருப்பினும், இந்த ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் வறண்ட வானிலையும், வழக்கத்திற்கு மாறான கடுமையான வெப்பமும் நீடித்ததால் மின்சாரத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதன் விளைவாக, கடந்த வியாழக்கிழமை அன்று மாநிலத்தின் ஒட்டுமொத்த உச்ச மின் தேவை முதன்முறையாக 21,700 மெகாவாட்டைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியது.
அதனைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அன்று தினசரி மின் நுகர்வும் கோடைக்கால அளவை விட அதிகரித்து 475.447 மில்லியன் யூனிட்டுகளாகப் பதிவாகி புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. இம்மாதிரியான கடுமையான மின் தேவையைத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாகச் சமாளித்துள்ளது. இதற்குத் தமிழ்நாட்டில் நிலவிய சாதகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியே முக்கியக் காரணமாக அமைந்தது.
குறிப்பாக, காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி மூலமாக மட்டுமே தினசரி சராசரியாக 150 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, இந்த ஜூலை மாதத்தில் மட்டும் முதன்முறையாக 15 நாட்களுக்கு மேல் காற்றாலை மின் உற்பத்தி 100 மில்லியன் யூனிட்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.இதற்கிடையே, மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், மின்சாரத்திற்கான ஒட்டுமொத்த தேவை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
