சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2 வார கால லண்டன் பயணத்தை முடித்துவிட்டு, நேற்றிரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 4ம் தேதி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையிலிருந்து துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நேரில் கலந்துகொண்டு, உயர்கல்வி பட்டம் பெற்ற பேரன் இன்பநிதியை பாராட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். லண்டனில் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு, ஸ்டாலின் லண்டனிலிருந்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, நேற்று காலை சென்னை திரும்புவதாக இருந்தது.
ஆனால் லண்டனிலிருந்து துபாய் வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தாமதமாக துபாய் வந்ததால், உடனடியாக சென்னைக்கு வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தை பிடிக்க முடியவில்லை. எனவே துபாயில் சில மணி நேரங்கள் ஓய்வு எடுத்து விட்டு, அதன் பின்பு மாலையில் துபாயிலிருந்து சென்னை புறப்படும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம், நேற்று இரவு 8.40 மணியளவில் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள், தமிழக முன்னாள் அமைச்சர்கள், கட்சித் தொண்டர்கள் பலர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தனது ஒரு வார கால லண்டன் பயணத்தை முடித்துவிட்டு அதே எமிரேட்ஸ் பயணிகள் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை திரும்பினார்.
