திருத்தணி காவல் நிலையம் அருகே மெக்கானிக் கண்களில் மிளகாய் பொடி வீசி கொடூர தாக்குதல்

திருத்தணி: திருத்தணி காவல் நிலையம் அருகே மெக்கானிக் கண்களில் மிளகாய் பொடி வீசி கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய வாலிபரை அதிகாலை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி ஜெ.ஜெ.ரவி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (32). அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்கள் விற்பனை ஏஜென்சியில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். தற்போது வேலையை விட்டு தனியார் கம்பெனியின் உணவு டெலிவரி செய்யும் வேலையை கடந்த 20 நாட்களாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி பிரியா. தனியார் காபி விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் வெளியில் சென்ற தமிழரசன் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி சந்தேகமடைந்து உறவினர் உள்ளிட்ட பலரிடம் விசாரித்துள்ளார். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே, திருத்தணி காவல் நிலையம் அருகே கன்னிகாபுரம் சாலையோரத்தில் வாலிபர் ஒருவர் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் அருகில் மிளகாய் பொடி கொட்டி இருந்ததை பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு விசாரித்தபோது தமிழரசன் என்பது தெரியவந்தது.

பின்னர், சிகிச்சைக்காக அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக வெட்டப்பட்டாரா? அல்லது வழிப்பறி கும்பல் நகை, செல்போனை பறிக்க மிளகாய் பொடி தூவி வெட்டினார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி காவல் நிலையம் அருகே மிளகாய் பொடி வீசி மெக்கானிக்கை கும்பல் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: