×

சரித்திர பதிவேடு குற்றவாளியை பிடிக்க முயற்சி; தனிப்படை எஸ்ஐக்கு அரிவாள் வெட்டு: மீஞ்சூர் அருகே பரபரப்பு

பொன்னேரி: மீஞ்சூர் அருகே பதுங்கியிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை நேற்றிரவு பிடிக்க வந்த சென்னை தனிப்படை எஸ்.ஐக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்து, மீஞ்சூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரக துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வில்லிவாக்கம் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி பூபாலன் (34). இவர்மீது சென்னை நகர காவல்நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், ஒரு வழக்கு தொடர்பாக தலைமறைவான பூபாலனை சென்னை போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் குற்ற வழக்கில் தலைமறைவான சரித்திர பதிவேடு குற்றவாளி பூபாலன் பதுங்கியிருப்பதை செல்போன் சிக்னல் மூலம் சென்னை போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, போதைபொருள் தடுப்பு பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்பட 2 பேர், நேற்று நள்ளிரவு மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை பிடிக்க முயற்சித்தனர். அப்போது, வீட்டுக்குள் பதுங்கியிருந்த பூபாலனின் கூட்டாளிகள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷின் தலையில் சரமாரி அரிவாளால் வெட்டிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் பூபாலன் உள்பட அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர். தலையில் படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், மீஞ்சூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி காவல் ஆணையரக ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், இணை ஆணையர் சிவகுமார் மேற்பார்வையில், செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான பூபாலன் சமீபகாலமாக அத்திப்பட்டில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதுபற்றி உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில் கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தாக்கியது, ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு குற்றப் பிரிவுகளில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தலைமறைவான சரித்திர பதிவேடு குற்றவாளி பூபாலன் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Meenjur ,Ponneri ,Chennai ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூரில்...