சுகாதார திட்டங்கள் சார்ந்த செலவினங்களை நாட்டின் வளத்திற்கான ஒரு முதலீடாகவே பார்க்கிறோம் – ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: இந்திய மருத்துவச் சங்கம் ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழாவில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்த விழாவில் டாக்டர் பரத் அகர்வால், டாக்டர் ஏ.கே. படேல், டாக்டர் நவீன் டாங், டாக்டர் எஸ். ராஜசேகரன் மற்றும் டாக்டர் சி.பி. தாக்கூர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை ராஜ்நாத் சிங் வழங்கி பாராட்டினார்.

பின்னர் விழாவில் பேசிய ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரச் செலவினத்தை வெறும் நலத்திட்டச் செலவாக மட்டும் பார்க்காமல், நாட்டின் வளத்திற்கான ஒரு முதலீடாகவே ஒன்றிய அரசு கருதுவதாக குறிப்பிட்டார்.

ஆயுஷ்மான் மற்றும் ஆரோக்கிய மந்திர் போன்ற முன்னெடுப்புகள் மூலம் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சிறப்பானவை. சமீப ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியானது மருத்துவ சிகிச்சையை மிகவும் எளிதில் கிடைக்க கூடியதாகவும், வலுவானதாகவும் மாற்றியுள்ளது. e-Sanjeevani தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பெரும் நன்மைகளை அளித்து, தொலைதூர மருத்துவச் சேவையை மேம்படுத்தியுள்ளது என்றார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்த தளத்தின் வாயிலாக 47 கோடிக்கும் அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் (teleconsultations) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய முன்னெடுப்பு திட்டங்களின் பட்டியல் மிக நீளமானது, கடந்த 12 ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஒட்டுமொத்தமாக 194% வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறார்.

 

Related Stories: