சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சீர்காழி, திருவண்ணாமலை, சிதம்பரம், கல்லிடைக்குறிச்சி, கோவை , திசையன்விளை, தென்காசி தாலுகா அலுவலகங்களில் சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், திருப்பூர் உடுமலை வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தினர்
லஞ்சம் வாங்குவோர் குறித்து புகார் அளிக்க வாட்ஸாப் எண் மற்றும் இமெயில் முகவரி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பத்திரப்பதிவு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த சோதனை அனைத்தும் இன்று நடந்தது. இதில் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லஞ்சம் வாங்கிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல் போன்ற அரசு சேவைகளுக்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் அதிகப்படியாக லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தொடர் புகார்களின் அடிப்படையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ய இந்த திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திசையன்விளை, தென்காசி தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ரூ.32 ஆயிரத்து 200 லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை திருவண்ணாமலை, கொடைக்கானல், மேல்மலையனூர், உடுமலை, நாமக்கல், திருவாரூர், கரூர், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, கோபிசெட்டிபாளையம், கோவை வடக்கு, வாணியம்பாடி, தென்காசி, வேதாரண்யம், குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்களில் கணக்கில் வராத கட்டு கட்டாக பணங்கள் பறிமுதல் செய்தனர்.
