சிவப்பு சிக்னலை தாண்டிச் செல்வதை தடுக்கும் வகையில் ரயில் ஓட்டுநர்களுக்கு 15 நாள் தீவிர பாதுகாப்பு இயக்கம்: தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு

சென்னை: ரயில் ஓட்டுநர்களுக்கு 15 நாள் தீவிர பாதுகாப்பு இயக்கத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த 6ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே சிவப்பு சிக்னலை தாண்டிச் சென்றது. இதை தொடர்ந்து, அந்த ரயிலின் ஓட்டுநர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்தே, சென்னை கோட்டம் இந்த 15 நாள் பாதுகாப்பு இயக்கத்தை ஜூலை 24 வரை நடத்த உத்தரவிட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அதே வேளையில், தங்களின் பணிச்சுமை மற்றும் அழுத்தங்கள் குறித்து லோகோ பைலட்டுகள் வேதனை தெரிவித்துள்ளனர். ரயில்களை துல்லியமான நேரத்திற்கு இயக்க வேண்டும் என்ற கடுமையான அழுத்தம் தங்களுக்கு வழங்கப்படுவதாகவும், இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஓட்டுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சமர்ப்பித்துள்ள மனுவின்படி, இந்திய ரயில்வேயில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, லோகோ ரன்னிங் பிரிவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள், அதாவது சுமார் 39,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தற்போது பணியில் இருக்கும் ரயில் ஓட்டுநர்கள் தொடர்ந்து 14 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தலைமை லோகோ இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் பெருமளவில் காலியாக உள்ளதால், எஞ்சியிருக்கும் ஊழியர்களுக்குப் பணி அழுத்தம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related Stories: