கோவை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் கடும் மோதல்: மேயர், ஆணையரை முற்றுகையிட்டு கோஷம்: காங்கிரஸ் கவுன்சிலர் அதிரடி சஸ்பெண்ட்

கோவை: கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் பெண் கவுன்சிலர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டதோடு மேயரை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கவுன்சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் துவங்கியதும், 44வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்ட சில கவுன்சிலர்கள், தங்களது இருக்கையை விட்டு எழுந்து, மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் இருக்கை நோக்கி சென்றனர். திடீரென அவர்களை முற்றுகையிட்டு, செம்மொழி பூங்கா திட்டத்தில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. இதற்கு மேயர் பதிலளிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், மன்றத்தில் பரபரப்பு நிலவியது.

அப்போது, மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கல்வி குழு தலைவர் மாலதி, தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி உள்ளிட்ட திமுக பெண் கவுன்சிலர்கள், காயத்ரியின் கையை பிடித்து இழுத்து, மேயரை முற்றுகையிடக்கூடாது எனக்கூறி தடுத்தனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மன்றத்தில் ஒரே கூச்சல், குழப்பம் நிலவியது. இதைத்தொடர்ந்து, மன்ற விதிகளை மீறி நடந்தாக கூறி, 44வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்பட 5 கவுன்சிலர்களை சஸ்பெண்ட் செய்வதாக மேயர் ரங்கநாயகி அறிவித்தார். இதனால், மீண்டும் கூச்சல் குழப்பம் நிலவியது.

தொடர்ந்து கூட்டத்தை நடத்த முடியாத காரணத்தால், காலை 11 மணியில் இருந்து பகல் 12 மணி வரை கூட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார். பின்னர், மதியம் 12.05 மணிக்கு மீண்டும் கூட்டம் துவங்கியது. அப்போது, மேயர் ரங்கநாயகி, காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மட்டும் 2 கூட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார். இக்கூட்டத்தில், மாநகர வளர்ச்சி பணிகள் தொடர்பாக மொத்தம் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: