ஊடகவியலாளரிடம் விசாரணை என்ற பெயரில் உளவியல்ரீதியாக துன்புறுத்தல்: திருமாவளவன் கண்டனம்

மதுரை: ஊடகவியலாளரிடம் விசாரணை என்ற பெயரில் உளவியல்ரீதியாக துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 20ம் தேதி துவங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற பாஜ முயற்சிக்கலாம்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தையும் இயற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஊடகவியலாளர் விஜயன் மீது சந்தேகப்பட்டு விசாரணை என்கிற பெயரால் நள்ளிரவு வேளையில் இழுத்தடித்து அலைக்கழித்திருக்கின்றனர். விசாரிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. இத்துறைக்கும், அரசுக்கும் உள்ள அதிகாரம் அது.

உளவியல்ரீதியாக துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதை போன்ற ஒரு கருத்து உருவாகி இருக்கிறது. இந்த போக்கு ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. ஊடவியலாளர்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அல்லது அச்சுறுத்தும் வகையில் காவல்துறையோ பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் செயல்பட அனுமதிக்கக் கூடாது. விஜயனை அச்சுறுத்துவது கவலை அளிக்கிறது. இந்த போக்கை கைவிட வேண்டும். இந்த போக்கு கண்டிக்கப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.

Related Stories: