மழைப்பொழிவு குறைவால் விளைச்சல் பாதிப்பு; கிலோவுக்கு ரூ.20 மூட்டைக்கு ரூ.600 அதிகரிப்பு; அரிசி விலை கிடுகிடு உயர்வு: பற்றாக் குறையால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தஞ்சாவூர்: மழைப்பொழிவு குறைவு, விளைச்சல் பாதிப்பால் அரிசி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.20ம், மூட்டைக்கு ரூ.600 வரையிலும் அதிகரித்துள்ளது. பற்றாக்குறையால் வருங்காலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை தமிழகத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

இங்கு விளைவிக்கப்படும் நெல், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நெல், லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்காக கொண்டு செல்லப்பட்டு அந்த அரிசியானது பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் போதிய மழை இல்லாததாலும், குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணையை திறக்காததாலும் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. தமிழ்நாட்டில் அரிசியின் தேவையை சமாளிக்கும் வகையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து சன்னரக அரிசி வாங்கப்பட்டாலும், அந்த மாநிலங்களிலும் வறட்சி மற்றும் மழை இல்லாத காரணத்தால் அரிசி விலை உயர்ந்துள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் நெல் உற்பத்தி குறைந்ததால் தமிழகத்திற்கு சன்ன ரக அரிசி வரத்து தற்போது குறைந்துள்ளது.

இதன் காரணமாக சன்னரக அரிசியின் விலை கிலோவிற்கு ரூ.20 வரையிலும், மூட்டைக்கு ரூ.600 வரையிலும் விலை உயர்ந்துள்ளது. அரிசி தட்டுப்பாடு காரணமாக கடந்த வாரம் ரூ.40க்கு விற்கப்பட்ட மைசூர் பொன்னி ரூ.20 உயர்ந்து ரூ.60க்கும், 1400க்கு விற்ற 26 கிலோ மூட்டை ரூ.160 விலை உயர்ந்து ரூ.1560க்கும், ரூ.65க்கு விற்கப்பட்ட கிலோ கர்நாடக பொன்னி ரூ.20 விலை உயர்ந்து ரூ.85க்கும், ரூ.1600க்கு விற்கப்பட்ட 26 கிலோ மூட்டை ரூ.610விலை உயர்ந்து ரூ.2210க்கும் விற்கப்படுகிறது.

விலை உயர்ந்தாலும், அந்த மாநிலங்களிலும் தட்டுப்பாடு நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு அரிசி வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. தமிழகத்தில் அரிசி வரத்து குறைவாக உள்ளதால் வரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அரிசியின் விலையும் மேலும் உயரும் அபாய நிலையும் இருந்து வருகிறது. இதுகுறித்து டெல்டா மாவட்ட அரிசி வணிகர்கள் சங்க செயலாளர் பால்ராஜ் கூறுகையில், ‘‘நெல் உற்பத்தி குறைவு மட்டுமே விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்ல முடியாது. மழை பொழிவு எதிர்பார்த்ததை விட மிக குறைவாக உள்ளது.

இந்த ஆண்டு குறுவை சாகுபடியும் சரியாக இல்லை. டீசல் விலை உயர்வால் லாரி வாடகை கட்டணம் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து அரிசி ஏற்றி வரும் லாரிகளின் வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இதனால் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை சுங்கச்சாவடி கட்டணமே செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இவைகள் எல்லாம்தான் அரிசி விலை ஏற்றத்துக்கு காரணம்.

அரிசி பற்றாக்குறை இருந்து வருவதால் அடுத்த 6 மாதங்களுக்கு அரிசி விலை உயர்வு தொடரும். இதன்காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். அரிசி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அரிசி கடை வணிகர்கள் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் கடைகளில் விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசிகளான மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி போன்ற அனைத்து பிராண்டட் சன்னரக அரிசி வகைகளும் கர்நாடகாவில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் தான் வருகிறது.

இந்த 2 மாநிலங்களிலும் நெல் உற்பத்தி குறைந்ததால் தமிழகத்திற்கு சன்ன ரக அரிசி வரத்து தற்போது குறைந்துள்ளது. இதன் காரணமாக சன்னரக அரிசியின் விலை கிலோவிற்கு ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. கர்நாடக பொன்னி அரிசி ரூ.50லிருந்து ரூ.70க்கும், 1050 ரக அரிசி ரூ.40லிருந்து ரூ.60க்கும், ஐஆர் 20 ரக அரிசி ரூ.40லிருந்து ரூ.55க்கும், பாபட்லா நாட்டு பொன்னி அரிசி ரூ.60லிருந்து ரூ.75க்கும் விற்பனையாகிறது. விளைச்சல் குறைவே அரிசி விலை உயர்வுக்கு காரணம் எனக்கூறப்பட்டாலும், பதுக்கலை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: