6 மாத போராட்டத்திற்கு தீர்வு எப்போது? கொள்முதல் நிலையங்களில் நெல் மூடைகளுக்கு ரூ.30 கோடி பாக்கி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொந்தளிப்பு

 

நெல்லை, ஜூலை 18: நெல்ைல மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூடைகளுக்கு ரூ.30 கோடி வரை பாக்கி இருப்பதாகவும், 6 மாதமாக அதை கேட்டு போராடியும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்தனர். நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் ஆனந்த் மோகன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா, வேளாண்மை துறை மாவட்ட இணை இயக்குனர் பூவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள், ‘தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூடைகள் விற்ற வகையில் ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.30 கோடி வரை பாக்கி உள்ளது. 6 மாதமாக போராடியும் அதற்கு நடவடிக்கை இல்லை. எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணத்தை வட்டியுடன் வழங்க வேண்டும்’ என கேட்டு கொண்டனர். பதிலளித்த கலெக்டர், ‘நாங்களும் உங்களுக்காக போராடி கொண்டிருக்கிறோம். விரைவில் தீர்வு எட்டப்படும்’’ என்றார். தொடர்ந்து விவாதம் நடந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெல்லை மாவட்ட செயலாளர் சுடலைராஜ்: மாவட்டம் முழுவதும் குளங்களில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளபடி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கரம்பை, வண்டல் மண்ணை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். களக்காடு யூனியனுக்கு உட்பட்ட நடுச்சாலைபுதூர், மேலச்சாலை புதூர், மாவடி, மலையடிபுதூர் கோவிலம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் தங்கள் பட்டா நிலங்களிலும், நாங்குநேரி ஜீயர் மட நிலங்களிலும் பல தலைமுறைகளாக நெல், வாழை மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இங்கு 18 குளங்கள் உள்ளன. இருப்பினும் குளங்களில் நீர் இல்லாததால் வானம் பார்த்த பூமியாக நிலங்கள் உள்ளன. இந்த குளங்களுக்கு நெட்டேரியன் கால்வாயில் இருந்தும் தண்ணீர் வருவதில்லை. திருக்குறுங்குடி பகுதியில் விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் இங்குள்ள மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் நெல்லை மாவட்ட செயலாளர் ஆபிரகாம்: நெல்லை மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் சிப்காட்-2 திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும்போது வனத்துறைக்கு சொந்தமான இடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மானூர் வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். ஆனால் அங்குள்ள வேளாண் துறை அலுவலகத்தில் உதவி இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே உடனடியாக உதவி இயக்குனரை நியமிக்க வேண்டும். வனவிலங்குகளால் அதிகளவு பயிர் சேதம் ஏற்படுகிறது. எனவே, வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மணிமுத்தாறு பாசன விவசாயி செங்குளம் வேலையா: பாபநாசம் அணையில் இருந்து மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வருவதற்கு மணிமுத்தாறுக்கும் பாபநாசத்திற்கும் மத்தியில் வனப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டி மணிமுத்தாறு விவசாயிகள் பலமுறை வலியுறுத்தி உள்ளனர். அதற்கு ஆய்வு நடத்தப்பட்டும், அந்தத் திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டு பாபநாசம் அணையில் இருந்து 4.7 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல மடங்கு டிஎம்சி தண்ணீர் கடலில் சென்றது. பாபநாசம் அணையை விட மணிமுத்தாறு அணை குறைவான உயரத்தில் உள்ளதால் பாபநாசம் அணையில் இருந்து மலையில் சுரங்கப்பாதை அமைத்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை 118 அடி கொள்ளளவு உள்ள மணிமுத்தாறு அணையை ஆண்டுதோறும் நிரப்ப முடியும். அப்படி நிரம்பினால் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், திசையன்விளை, ஏரல் உட்பட 7 தாலுகாவில் பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில துணை தலைவர் பெரும்படையார்: நாங்குநேரி, திருக்குறுங்குடி ஜீயர் மடங்களின் நிலங்கள் மற்றும் திருவாவடுதுறை ஆதீன மடங்களின் நிலங்களில் பயிரிடும் விவசாயிகளுக்கு எளிய முறை அடவோலை மாற்றம் செய்து தரவேண்டும். அடவோலை மாற்றத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை கமிஷன் கேட்கின்றனர். மேலும் அப்பகுதிகளில் தரிசு புஞ்சை நிலங்களை கார்ப்பரேட்களுக்கு அளிப்பதை கைவிட வேண்டும். சிவந்திப்பட்டி விவசாயி சுடலைமுத்து: சிவந்திப்பட்டி அருகே இட்டேரியில் பன்றி பண்ணையின் கழிவுகள் அங்குள்ள குளத்தில் கலக்கின்றன. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் குடியிருக்க முடியவில்லை. எனவே பன்றி பண்ணையை அகற்ற வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

 

Related Stories: