ஈரோடு, ஜூலை 17: ஆடி மாத பிறப்பையொட்டி ஈரோட்டில் அழிஞ்சி குச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ் மாதம் ஆடி 1ஐ வரவேற்கும் விதமாக தமிழகத்தில் கொங்கு மண்டலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் தேங்காயில் மஞ்சள் பூசி, தேங்காய்க்குள் எள், கடலை, வெல்லம், அவல் உள்ளிட்ட பல வகை பொருட்களை இட்டு, அந்த தேங்காய்க்குள் அழிஞ்சி குச்சி சொருகி தீயில் சுட்டு, இறைவனுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதன்படி, இன்று (17ம் தேதி) ஆடி மாத பிறப்பையொட்டி, ஈரோடு மாநகரில் நேற்று தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சிகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தது. இதில், ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள நேதாஜி தினசரி மார்க்கெட், ஆர்கேவி சாலை, மணிக்கூண்டு, பெரியமாரியம்மன் கோயில், சூரம்பட்டி, கொல்லம்பாளையம், ரங்கம்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் அழிஞ்சி குச்சிகள் குவிக்கப்பட்டு, விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்றது.
இதுகுறித்து அழிஞ்சி குச்சிகளை விற்பனை செய்யும் வியாபாரி கூறுகையில், ‘‘அழிஞ்சி குச்சிகள் சேலம் மாவட்டம் சங்ககிரி, எடப்பாடி, தேவூர் பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்.
இந்த குச்சிகள் சில்லறை விலையில் ஒன்று ரூ.17 முதல் ரூ.20 வரையிலும், மொத்த விலையில் ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது’’ என்றனர்.
