சொத்து தகராறில் வீட்டை சூறையாடிய வழக்கில் 8 பேருக்கு 15 ஆண்டு சிறை திருச்செங்கோடு நீதிமன்றம் தீர்ப்பு

 

திருச்செங்கோடு, ஜூலை 16: திருச்செங்கோடு அருகே, வீட்டை சூறையாடிய வழக்கில், 8 பேருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்செங்கோடு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவர் நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் ராஜ்குமார் என்பவரிடம், ரூ.15 லட்சம் கடனாக பெற்றிருந்தார். இதில் ரூ.8 லட்சம் திருப்பி செலுத்தி இருந்த நிலையில், மீதம் ரூ.7 லட்சம் போர்வெல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக பாண்டுரங்கன், டாக்டர் ராஜ்குமாருக்கு 6 மாத காலத்திற்கு தனது கூட்டப்பள்ளியில் இருக்கும் வீட்டை நம்பிக்கைக்காக பவர் ஆப் பட்டா செய்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த 1999ம் வருடம் டாக்டர் ராஜ்குமார், தனது பெயரில் வீட்டை கிரயம் செய்து கொண்டார். கிரயம் செய்தது செல்லாது என, கடந்த 2001ம் ஆண்டு நீதிமன்றத்தில் பாண்டுரங்கன் வழக்கு தொடுத்தார். வழக்கில் வீட்டை ஒரு மாத காலத்திற்குள், பாண்டுரங்கனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.ஆனால் டாக்டர் ராஜ்குமார், கடந்த 2002ம் ஆண்டு 37 அடியாட்களுடன் கூட்டப்பள்ளியில் உள்ள பாண்டுரங்கன் வீட்டிற்கு சென்று, வீட்டின் கதவை உடைத்து வீட்டிலிருந்த மகன்கள், மகள், மருமகன் ஆகியோரை கட்டிப் போட்டு, வீட்டிலிருந்த பொருட்களை லாரிகள் மூலம் எடுத்து சென்றுள்ளார். இது தொடர்பாக திருச்செங்கோடு நகர போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரை தொடர்ந்து வழக்கு திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 24 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், 29 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள முக்கிய குற்றவாளிகளான ராஜ்குமார், சிவக்குமார், செந்தில், மோகன் என்கிற மோகனசந்திரன், கமல் என்கிற சீனி, சக்தி என்கிற சத்தியமூர்த்தி, கண்ணன், ரமேஷ் ஆகிய 8 பேருக்கு, கூடுதல் மாவட்ட திருச்செங்கோடு நீதிபதி மாலதி 15 ஆண்டு 3 மாதம் கடுங்காவல் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகளை காண அவர்களது உறவினர்கள் பலரும் நீதிமன்றத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: