எம்எல்ஏக்களை தவெகவுக்கு இழுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது: திருமாவளவன் கண்டனம்

 

அரியலூர்: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அரியலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி நதிநீர் விவகாரத்தில் நம்முடைய அனைவரின் நிலைப்பாடு மற்றும் உணர்வு தான் தமிழக அரசின் நிலைப்பாடாகவும் , உணர்வாகவும் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. தமிழ்நாட்டு நலன்களை பாதுகாப்பதில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசு உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி, கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை. ஒன்றிய அரசும் அவ்வாறு ஒரு சார்பு நிலை எடுக்காது என்று நான் பெரிதும் நம்புகிறேன். தமிழக அமைச்சர் அவையில் பங்கேற்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்படி ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டால் அதனை நாங்கள் வரவேற்போம்.

ஒரு ஆங்கில நாளிதழில் ‘‘ஆபரேஷன் எல்’’ என்ற கட்டுரையில் ஆகஸ்ட் 15க்குள் அதிமுகவை சேர்ந்த 10 எம்எல்ஏக்களை தவெக தன் பக்கம் இழுக்கும் முயற்சி நடைபெறுவதாக வெளியானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதுபோன்ற செயல்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து கண்டித்து வருகிறது. நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் உயிரிழப்பு பெரும் துயரமளிக்கிறது. சிறையில் இதுபோல அத்துமீறல்களும், படுகொலைகளும் அரங்கேறுவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. சபரிவர்மனுடைய சாவுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திராவிட கட்சிகளை பலவீனப்படுத்த பாஜ, ஆர்எஸ்எஸ் சூழ்ச்சி
‘‘தமிழ்நாட்டில் இரு துருவ அரசியலை நிலை நாட்ட வேண்டும் எனும் முனைப்பு தவெகவுக்கு உள்ளது. ஆனால், திராவிடக் கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும். அதிமுகவை முற்றாக அழித்து ஒழிக்க வேண்டும் என பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. அதிமுகவை குறி வைத்துதான் அண்ணாமலையும் காய் நகர்த்தினார் அல்லது அண்ணாமலையை நகர்த்தி இருக்கிறார்கள். அதனால் தான் அவர் மேற்கு மாவட்டங்களை குறிவைத்து மாநாடு பொதுக்கூட்டங்களை நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஆதரவாக இருக்கக்கூடிய சமூகத்தின் வாக்கு வங்கியை, சமூகப் பின்னணியோடு தம் பக்கம் ஈர்த்துவிட்டால்,

அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தி செயலிழக்க செய்ய முடியும் என சங்பரிவார்கள் கணக்கு போட்டு அண்ணாமலையை பின்னிருந்து இயக்குவதாக நான் ஊகிக்கிறேன். முதலில் அதிமுகவை குறிவைத்து பலவீனப்படுத்துவது. பின்னர் திமுகவை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்துவது என்கின்ற சங்பரிவார்களின் சூது அரசியல், சூழ்ச்சி நிறைந்த அரசியல் அரங்கேறிக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். இந்த சூழ்ச்சி அரசியலில் தவெகவும் இணைந்துள்ளதா என்பது குறித்து தவெகவிடம் தான், நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். தவெக கூட்டணியில் பாமக இணைகிறதா என்ற யூகங்களின் அடிப்படையில் கேட்கும் கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது’’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Related Stories: