2031ம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகனசார்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு அரசு முடிவு

சென்னை: 2031ம் ஆண்டுக்குள் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவுபடுத்தும் வகையில் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மின்சார வாகன பயன்பாட்டை அதிகரித்தல், தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல், ஆரம்ப முதலீட்டு தடைகளை குறைத்தல் மற்றும் உலகத் தரத்திலான மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், நிலையாக போக்குவரத்து துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில், ஐடிடிபி இந்தியா மற்றும் கெய்டன்ஸ் தமிழ்நாடு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உயர்மட்ட தொழில்நுட்பக் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத்தில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தற்போதுள்ள உயரழுத்த, அதிஉயரழுத்த மின் இணைப்புகளின் அனுமதிக்கப்பட்ட மின் சுமை வரம்பிற்குள் அமைக்கப்படும் மின்சார வாகன சார்ஜிங் வசதிகளுக்கு தனி துணை மின்மீட்டர் அமைக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனி மின் இணைப்பு பெற வேண்டிய அவசியமில்லை, நிலைக்கட்டணம், குறைந்த பட்ச மாதாந்திர கட்டணம் விதிக்கப்படாது.

மின் வாகன மின் கட்டணத்தின் கீழ் மின் பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். இந்த நடைமுறையால் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கூடுதல் மின் உள்கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டிய தேவையின்றி, குறைந்த முதலீட்டில் விரைவாக மின்வாகன சார்ஜிங் வசதிகளை அமைக்க முடியும்.

தேவையுள்ள இடங்களில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பிற்காக தனியாக ஒரு புதிய மின் சேவை இணைப்பைப் பெறவும் அனுமதி வழங்கப்படும். மின்சார வாகனக் கொள்கை 2023-ல் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2031ம் ஆண்டிற்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை விரைவாக அடைய இம்முயற்சிகள் வழிவகுக்கும் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: