ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் குண்டுவீச்சு: ஒரு இந்தியர் பலி; 10 பேர் படுகாயம்; அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி

துபாய்: ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் குண்டுவீசியது பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இதில் இந்திய மாலுமி ஒருவர் பலியானார். மேலும் 10 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இது மேற்கு ஆசியாவில் மேலும் முழு அளவிலான போர் சூழலை உருவாக்கி உள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்தம் முறிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இரு தரப்பும் மீண்டும் மோதிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, உலகின் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் 5ல் 1 பங்கு விநியோகிக்கப்படும் கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை கைப்பற்ற அமெரிக்காவும் ஈரானும் போட்டி போட்டு வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதாக ஈரான் கூற, அதை மறுக்கும் அதிபர் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா நிர்வகிப்பதாகவும் அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறினார். இந்நிலையில், அமெரிக்க படைகள் நேற்று அதிகாலை ஈரானின் பல இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தின.

இதில் ஈரானின் 5க்கும் மேற்பட்ட நகரங்களில் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடக நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈரான் மீது மற்றொரு சுற்று தாக்குதலை அமெரிக்க ராணுவம் தொடங்கியிருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் கூறிய சில நிமிடங்களில் அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் அவர்களை மிகக் கடுமையாக தாக்குகிறோம். இது தொடரும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நாங்கள் ஈரானின் அனைத்து திறன்களையும் முடக்குகிறோம். ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்படுத்துகிறோம்.

அங்கு எங்கள் முற்றுகையை மீண்டும் அமல்படுத்துகிறோம்’’ என்றார். இதைத் தொடர்ந்து, பக்ரைனிலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் மொம்பாசா, அல் பஹியா எனும் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் குண்டுவீசியது. எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகரக் காவலர் படை பொறுப்பேற்றது. அதன் அறிக்கையில், ‘‘அந்தக் கப்பல்கள் மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் புறக்கணித்தன. அவை கண்ணிவெடிப் பகுதி வழியாகச் செல்லத் தேர்ந்தெடுத்தன.

அதன் விளைவாக அவை குறிவைக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன’’ என கூறி உள்ளது. இதில் 2 கப்பல்களிலும் தீப்பிடித்தது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த ஒரு இந்திய மாலுமி பலியானார். 12 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் இந்தியர்கள், 2 பேர் உக்ரைனைச் சேர்ந்தவர்கள். குரூஸ் ஏவுகணை மூலம் ஈரான் தாக்கியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரானுக்கு பதிலடி தரப்போவதாகவும் அமீரகம் மிரட்டி உள்ளது. இதற்கு முன் போரின் ஆரம்பகட்டத்திலும் அமீரகம், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தாலும், இதுவரை போரில் நேரடியாக இடம் பெறவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவது அப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எண்ணெய் கப்பல் அச்சத்தில் உள்ளன.

சர்வதேச வர்த்தகத்தில் நேற்று காலை பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு மாதத்தில் இல்லாத அளவாக 84 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. இது போரின் உச்சக்கட்டத்தில் எட்டப்பட்ட 120 டாலர் விலையை விடக் குறைவாக இருந்தாலும், எல்லா துறைகளிலும் செலவுகளை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. ஈரானில் நேற்று பிற்பகலிலும் பல இடங்களில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

* பாரசீக வளைகுடாவில் 7 இந்திய கப்பல்கள்
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றமான சூழலுக்கு மத்தியில் அதன் மேற்கு பகுதியில் இந்திய கொடியுடன் கூடிய 7 கப்பல்கள் இருப்பதாக இந்திய அரசு அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். பதற்றம் தணியும் வரை இந்த கப்பல்கள் பாரசீக வளைகுடாவை விட்டு வெளியேற வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார். 7 கப்பல்களில் மொத்தம் 148 மாலுமிகள் சிக்கியுள்ளனர்.

* ஈரான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ஒரு இந்தியர் பலியாகி உள்ளார். 10 பேர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் வரவழைத்து கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘எம்டி மொம்பாசா, எம்டி அல் பஹியா ஆகிய 2 கப்பல்களில் 46 பணியாளர்கள் இருந்தனர். அதில் 36 மாலுமிகள் இந்தியர்கள். அல் பஹியா கப்பலில் இருந்த 12 இந்தியர்களில் ஒருவர் பலியாகி உள்ளார். மற்றொருவர் காயமடைந்தார். மொம்பாசா கப்பலில் 18 இந்தியர்களில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவர் பலத்த காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களையும், மாலுமிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் வன்முறைச் செயல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச நீர்வழிகள் வழியாக சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயல்களையும் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா-ஈரான் இடையே போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மேற்கு ஆசியாவில் 14 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.

* ஹார்முஸ் ஜலசந்தி ஒருபோதும் திறக்கப்படாது
ஈரானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘‘போர், தீமை மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி ஒருபோதும் திறக்கப்படாது.

இந்த முக்கியமான நீர்வழிப் பாதை விவகாரத்தில், எங்கள் நாட்டின் ஆயுதப் படைகள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது. ஈரான் மக்களின் உரிமைகளை மதிப்பது மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான ஒரே வழி. தியாகிகளின், குறிப்பாக இஸ்லாமியப் புரட்சியின் தியாகித் தலைவரின் ரத்தத்திற்குப் பழிவாங்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது’’ என்றார்.

* ஹார்முஸ் ஜலசந்தியில் வரி விதிக்கும் அமெரிக்கா
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவின் நூற்றாண்டு கால கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போரின் தொடக்க காலத்தில் கூட ஹார்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் பொதுவானதாக திறந்திருக்க வேண்டுமென அமெரிக்கா கூறி வந்தது. இங்கு கப்பல்கள் கடக்க ஈரான் கட்டணம் வசூலிப்பதையும் அமெரிக்கா விரும்பவில்லை. இந்நிலையில் திடீர் மாற்றமாக அதிபர் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு 20 சதவீதம் வரி விதிப்பதாக கூறி உள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் அனைத்து கப்பல்களும் பாதுகாப்பாக கடந்து செல்ல அமெரிக்கா மிகப்பெரிய அளவில் செலவு செய்வதாகவும் அதை ஈடுகட்ட ஒவ்வொரு கப்பலும் அதன் சரக்கில் 20 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டுமெனவும் டிரம்ப் கூறி உள்ளார். இவ்வாறு, அமெரிக்காவோ அல்லது ஈரானோ கட்டணம் வசூலிக்க முயற்சிப்பது, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் குறித்த உலகளாவிய நெறிமுறைகளை மீறுவதோடு, பதட்டங்களையும் அதிகரிக்கும். இது உலகளவில் மேலும் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தக்கூடும்.

Related Stories: