சென்னை: சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம் மற்ற இருவரின் தண்டனையை குறைத்து தீர்ப்பளித்தது. இதில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான கட்டணத்தை வழங்கக் கோரி ப.பா.மோகன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய மோகனுக்கு உரிய கட்டணத்தை 3 வாரங்களில் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜரானதற்கு உரிய கட்டணம் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செலவுகளை வழங்க முடியாது என்று தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கில் ஆஜரானதற்கான கட்டணம், போக்குவரத்து செலவுகளை சேர்த்து 12 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த தொகையை வழங்காமல், அரசு தனது நேரத்தையும், சக்தியையும், மக்கள் பணத்தையும் மேல் முறையீட்டுக்காக செலவிடுவதை விட அந்த தொகையை வழங்கலாம் எனக் கூறி தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி, போக்குவரத்து செலவுகளை 4 வாரங்களில் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
