சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா பெற்று பயன்படுத்தி வந்த இடத்தை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை கடந்த 9ம்தேதி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை 3084 ஏக்கருக்கு விலக்கிக் கொண்டுள்ளது. இந்த தடை நீக்க ஆணையை வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் பாஜ, இந்து முன்னணி,
இந்து மகா சபா போன்ற சங்பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கடந்த ஆட்சிக் காலத்தில் மீட்கப்பட்டது என்பதை நினைவுபடுத்துகிறோம். சங்பரிவார் அமைப்புகள் இதை எதிர்த்து நியாயமற்ற விமர்சனங்களை முன்வைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இதேபோல், மாநிலம் முழுவதும் இனாம் நில விவசாயிகளும், பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணையை முன்மாதிரியாகக் கொண்டு இனாம் நில பிரச்னைக்கு முழுமையாக தீர்வு காண வேண்டும்.
