இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்.! குதிரை பேரம் – மக்கள் தான் தண்டிக்கனும்.. இ.கம்யூ., கடும் விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டில் எம்எல்ஏ-க்களை வைத்து குதிரை பேரம் நடப்பதாக தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தின் நலனுக்காக ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று சாடி உள்ளார்.

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மு.வீரபாண்டியன், எம்எல்ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தும் கலாச்சாரம் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பரவியுள்ளது என்றார். குதிரை பேரங்கள் நம் கண்முன்பே அரங்கேறுவதாகவும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் நலனை பாதுகாத்து கொண்டு, பதவியில் நீடிக்கவே குதிரை பேரங்களில் ஈடுபடுவதாக சாடினார்.

வாக்காளர்களின் விரல்களில் உள்ள மை மறைவதற்கு முன்பே எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி மாறுவது என்பது, மக்களின் தீர்ப்புக்கு துரோகம் செய்வது போன்றதாகும் என்றார். இது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது என்றும் கூறி இருக்கிறார். தமிழகத்தில் இடதுசாரிகளின் பலத்தை சோதிக்க வேண்டி இருப்பதால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட இருக்கிறோம். எங்களுக்கு மாநிலம் முழுவதும் கட்டமைப்பு இருக்கிறது. மாநில முழுவதும் தொண்டர்கள் பரவி இருக்கிறார்கள்.

அதே நேரம் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். முதல்வர் விஜய் கரூரில் பேசிய விதம் குறித்த கேள்விக்கு, தவெக அரசு இன்னும் தேர்தல் மனநிலையிலேயே தான் உள்ளது என முதல்வரை சாடினார். இனிவரும் காலங்களிலாவது முதல்வர் விஜய் ஜனநாயக சக்திகளுக்கு எதிரான பேச்சுக்கள் மாற்றம் சைகைகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போதுமே அரசியல் முதிர்ச்சியை கடைபிடித்து, ராஜதந்திரத்தை வெளிப்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டார்.

Related Stories: