வியட்நாம் படகு விபத்து: பலியான 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்களின் உடல்கள் இன்று மும்பை வருகை

ஹனோய்: வியட்நாமின் பூ குவாக் தீவு அருகே 36 பேருடன் சென்ற படகு கடந்த சனிக்கிழமை பிற்பகல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் அடங்குவர் என இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ‘ஓஷன் பியர் ஐலேண்ட்’ நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தப் படகு, ஹான் மே ரட் தீவிலிருந்து அன் தோய் துறைமுகத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் இன்று தாயகம் கொண்டு வரப்பட உள்ளதாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் உடல்கள் மும்பைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த விமானம் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு புறப்பட்டு, இந்திய நேரப்படி இரவு 9:35 மணிக்கு மும்பை விமான நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜூலை 11 அன்று நடந்த படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் இன்று ஹோ சி மின் நகரில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்களைப் பெற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இருப்பிடங்களுக்குக் கொண்டு சேர்க்க தேவையான உதவிகளை செய்யுமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஹனோயில் உள்ள இந்திய தூதரகமும், ஹோ சி மின் நகரில் உள்ள தூதரகமும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வியட்நாமின் பூ குவாக் தீவுப் பகுதியில் நடந்த இந்த படகு விபத்தில் சிக்கி உயிர் தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த பயணிகள் சிலர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

Related Stories: