ஹோர்முஸ் நீரிணையின் உண்மையான பாதுகாவலர் நாங்கள் தான்; நியாயமான கட்டணம் வசூலிப்போம் – ஈரான் அதிரடி

தெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து சரக்கு கப்பல்களுக்கும் 20 சதவீத கட்டணம் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையின் உண்மையான பாதுகாவலராக ஈரானே எப்போதும் இருந்து வருகிறது என்றும், அமெரிக்கா அல்ல என்றும் ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாதிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, “அமெரிக்க அதிபரின் கருத்து முற்றிலும் சரியானது. ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்யும் தரப்பினர் தான் அதற்கான சேவை கட்டணத்தைப் பெற வேண்டும். அப்படி பார்த்தால் இந்த முக்கிய நீரிணையின் பாதுகாவலராக எப்போதும் நாங்களே (ஈரானே) இருந்து வருகிறோம்; இனியும் என்றென்றும் இதுவே தொடரும் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா அறிவித்துள்ள 20% கட்டணம் என்பது நிச்சயமாக மிக அதிகமானது. இந்த நீரிணையின் பாதுகாவலராக திகழும் நாங்கள் எப்போதும் நியாயமாகவே செயல்படுவோம் அதாவது நியாயமான கட்டணத்தையே நிர்ணயிப்போம் என்றும் சையத் அப்பாஸ் அராக்சி பதிவிட்டு உள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் “இனிவரும் காலங்களில் அமெரிக்கா ‘ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலராக’ இருக்கும். உலகின் மிகவும் பதற்றமான இந்தப் பகுதிக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளும் அதே வேளையில், நியாயமான நடைமுறையின் அடிப்படையில், இதற்கான செலவுகளை ஈடுகட்டவும் மற்றும் சேவைக் கட்டணமாகவும், அந்த நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகள் மீதும் 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான செயல்முறைகள் மற்றும் கட்டமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: