சேலம், ஜூலை 14: சேலத்தில் வருவாய்துறை சான்றிதழுக்கு புரோக்கர் மூலம் பணம் வசூலில் ஈடுபட்ட இ-சேவை மையத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் சர்மிளா பானு. இவரது மகன் அப்பாஸ் (13). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேலம் வந்திருந்தபோது சன்னியாசிகுண்டு பகுதியில் லாரி மோதி உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனுக்கான இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க, சேலம் அரசு கலைக்கல்லூரி எதிரே செயல்பட்டு வந்த தனியார் இ-சேவை ைமயத்தை அணுகினார்.
அப்போது விண்ணப்ப கட்டணமாக ரூ.60 பெற்றுக் ெகாள்வதற்கு பதிலாக, ரூ.350 வரை வசூல் செய்துள்ளனர். இதனை சர்மிளா பானு வழங்கிய நிலையில், ஒரு வாரம் கடந்தும் சான்றிதழ் குறித்த எந்த தகவலும் இல்லை. அதேசமயம், சர்மிளா பானுவை தொடர்பு கொண்ட கிச்சிப்பாளையத்தை சேர்ந்த புரோக்கர் வாசுதேவன் என்கிற தேவன், இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்றுத்தர ரூ.4 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சர்மிளா பானு, இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
இதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், கிச்சிப்பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவர் நடத்தி வந்த இ-சேவை மையத்தில் சர்மிளா பானு விண்ணப்பித்துள்ளார். அங்கு அதற்கான ஒப்புகை சீட்டு மட்டும் வழங்கிய நிலையில், அந்த விண்ணப்பம் மேற்கொண்டு எந்தவொரு அதிகாரிக்கும் அனுப்பப்படவில்லை. மாறாக, புரோக்கர் மூலம் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து விஏஓ மோகன்ராஜ், சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்திற்கு வாடிக்கையாளர் போல சென்று விசாரித்துள்ளார். அப்போது அவரிடமும் சான்றிதழுக்கு கூடுதலாக கட்டணம் கேட்டுள்ளனர். இதனையடுத்து சேலம் தாசில்தார் சிவராஜூக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் அங்கு சென்ற அவர், பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்ட இ-சேவை மையத்தை பூட்டி சீல் வைத்தார். தொடர்ந்து அவரது இ-சேவை மைய உரிமத்ைத ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட இ-சேவை மைய உரிமையாளர் மற்றும் புரோக்கர் மீது போலீசில் புகார் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
