புதுடெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, 2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் வெடித்த மத மோதல்களில் 53 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். டெல்லி கலவரத்தின்போது கும்பலால் தாக்கப்பட்டு, உடல் சாக்கடையில் வீசப்பட்ட உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில், முன்னாள் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேன் மற்றும் 4 பேரை டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் என அறிவித்தது. டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி பிரவீன் சிங் அவரை குற்றவாளி என அறிவித்தபோது உசேன் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.
டெல்லி கலவரம் நடந்தபோது அவர் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலராக இருந்தார், ஆனால் இவ்வழக்கில் அவர் பெயர் அடிபட்டதையடுத்து கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் ஆறு குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும் ஜாமீனில் வெளியே இருந்த அனஸ் மற்றும் ஜாவேத் ஆகியோரை காவலில் எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
