புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி தனி அறை பெட்டியை சொகுசு ஓட்டலில், ‘ஹனிமூன் சூட்’ போல அலங்கரிக்கப்பட்டிருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்போது ஓடும் ரயிலில் நடந்த ஹோமம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பூசாரி ரயில் பெட்டியின் தரையில் அமர்ந்து வழிபாட்டுச் சடங்குகளைச் செய்வது பதிவாகியுள்ளது.
இதில் குளிரூட்டப்பட்ட படுக்கையறைகள், சிறிய சமையலறை, வரவேற்பறை, உணவருந்தும் அறை, இணைக்கப்பட்ட குளியலறைகள் மற்றும் பிற வசதிகள் உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, வடக்கு ரயில்வே தனது எக்ஸ் கணக்கு மூலம் விளக்கம் அளித்தது. அந்த மதச் சடங்கு சாதாரண பயணிகள் பெட்டியில் நடைபெறவில்லை என்றும், மாறாகத் தனியாரால் முன்பதிவு செய்யப்பட்ட சலூன் கார் எனப்படும் சிறப்புப் பெட்டியில் நடைபெற்றது என்றும் அது தெரிவித்தது. ஐஆர்சிடிசி மூலம் ஒரு தனியார் தரப்பினரால் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ‘சலூன் கார்’ பெட்டியில்தான் இந்தப் பூஜை நடத்தப்பட்டதாக வடக்கு ரயில்வே கூறியது.
‘சலூன் கார்’ என்பது உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்ட, சொகுசு வசதிகள் கொண்ட ஒரு தனிப்பட்ட ரயில் பெட்டியாகும். இந்தச் சலூன் கார் ஜூலை 8 அன்று முன்பதிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 3,08,580-ஐ முன்பணம் செலுத்தப்பட்டதாக அந்த ரயில்வே மண்டலம் தெரிவித்தது. ஜூலை 10 அன்று புதுடெல்லியில் இருந்து மும்பைக்கு மேற்கொள்ளப்படும் பயணத்திற்காக, பஸ்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் இந்தச் சலூன் கார் இணைக்கப்பட்டு இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
