சென்னை: இந்திய ரயில்வேயின் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள், தங்களுக்குப் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் துண்டுகளை திருடிச் செல்லும் அதிர்ச்சிகரமான தகவல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட தணிக்கை மூலம் வெளிவந்துள்ளது. ஜனவரி 2022 முதல் மே 2026 வரையிலான காலக்கட்டத்தில், நாடு முழுவதும் உள்ள 18 ரயில்வே மண்டலங்களில் இருக்கும் 54 பிரிவுகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ரயில் பெட்டிகளில் இருந்து சுமார் 1..27 கோடி பொருட்கள் திருடப்பட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டில் மட்டும் இவ்வகையான திருட்டுச் சம்பவங்கள் 56% அதிகரித்துள்ளது என அந்த தணிக்கை அறிக்கை கூறுகிறது.
பயணிகள் தங்களது பைகளில் எளிதாக எடுத்துச் செல்ல முடிவதால், திருடப்பட்ட பொருட்களில் துண்டுகளே முதலிடத்தில் உள்ளன. பயணிகள் இந்த பொருட்களை தங்களுக்குச் சொந்தமானது போல் எடுத்துச் செல்வதால், இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கும் அதன் ஒப்பந்ததாரர்களுக்கும் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த திருட்டுகளால் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு மதிப்பு சுமார் ரூ. 104.51 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் அதிகபட்சமாக பிகானெர், ராஞ்சி மற்றும் டெல்லி ஆகிய ரயில் பிரிவுகளில் தான் இத்தகைய திருட்டுகள் அதிகமாக நடந்துள்ளன.
இதில் குறிப்பாக, பிகானெர் பிரிவில் மட்டும் தனியாக 25.76 லட்சம் பொருட்கள் காணாமல் போயுள்ளன. ரயில்வே நிர்வாகம் இந்த இழப்புத்தொகையை அந்தந்த ரயில் பெட்டிகளை பராமரிக்கும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வசூலிக்கிறது. ஒப்பந்ததாரர்கள் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, அங்கு பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணத்தைப் பிடித்துக்கொள்கின்றனர். பயணிகளின் இந்த பொறுப்பற்ற தவறான செயலால், குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் ஏழை ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவது சமூக ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நூதன திருட்டுகளை தடுக்க இந்திய ரயில்வே தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இனி பயணிகள் தங்களது இலக்கை அடைவதற்கும் அல்லது பயணம் முடிவதற்கும் 30 நிமிடங்களுக்கு முன்பே, தாங்கள் பயன்படுத்திய துண்டு, போர்வை மற்றும் படுக்கை விரிப்புகளை அங்கிருக்கும் ஊழியர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ரயில்வே சொத்துக்களை திருடுவது அல்லது சேதப்படுத்துவது என்பது ‘ரயில்வே சொத்து சட்டத்தின்’ கீழ் ஜாமீனில் வர முடியாத கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, பயணிகள் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
