சென்னை: தவெகவில் இணைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஓபன் வாக்கு மூலம் தொடர்பாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து நேற்று திமுக சார்பில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. அப்போது விஜய் அரசின் குதிரை பேரம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக இடங்களை கைப்பற்றியது. 108 தொகுதிகளை மட்டுமே தவெக பிடித்த காரணத்தால் ஆட்சி அமைக்க மேலும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை ஏற்பட்டது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது. இந்த சூழ்நிலையில் அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என திட்டம் போட்ட அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர்.
இதையடுத்து அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் பி.சத்யபாமா ஆகியோர் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி தவெக விலைக்கு வாங்கி விட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த வாரம் தமிழக ஆளுநரை திமுக, அதிமுக, பாஜவினர் சந்தித்து தவெக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக புகார் அளித்திருந்தனர். தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவையில் இல்லாத தனி நபர்கள் 2 பேர் கலந்து கொண்டதாகவும், தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர் பதவி உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி உத்தரவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து எம்ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கடந்த 2ம் தேதி தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர். அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், ‘‘தவெகவில் இருந்து எங்களை அணுகினார்கள். அது எங்களுக்கு பிடித்திருந்தது. இதனால் தவெகவில் இணைந்து விட்டோம்’’ என்று பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குதிரை பேரத்துக்கு வழிவகுத்துள்ளது. எனவே, இதை மையமாக வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெயரில் நேற்று தவெக அரசின் குதிரைபேர ஊழல் பற்றி ஆளுநரிடம் மீண்டும் புகார் அளிக்கபட்டது. இந்த புகார் மனுவை திமுக வழக்கறிஞர் அணியை சார்ந்த மருது கணேஷ், கவி கணேசன் ஆகியோர் நேற்று ஆளுநர் மாளிகையில் அளித்தனர். தொடர்ந்து தவெக அரசின் குதிரைபேர ஊழல் பற்றி திமுக சார்பில் ஆளுநரிடம் மீண்டும் புகார் அளிக்கபட்டது தொடர்பாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி: கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவிடமும், சிபிஐயிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல்வர் விஜய் குதிரைபேர ஊழலில் ஈடுபட்டு உள்ளார் என்பதை வைகோ அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஏற்கனவே கடந்த 4ம் தேதி ஆளுநரை சந்தித்து ஆதாரத்தோடு புகார் அளித்தோம். அதேபோல விஜயபாஸ்கரும் வெளிப்படையாகவே செய்தியாளர் கூட்டத்திலே என்னை தவெகவில் வந்து சேரும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆகவே தான் நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரும் சேர்ந்து விட்டார். ஆக இதெல்லாம் குதிரைபேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என்பதை சுட்டிக்காட்டி ஆளுநரிடத்தில் மீண்டும் ஒருமுறை திமுகவின் சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம். விஜய் பேசும் போது, கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுகிறார். கரூர் விஜய பாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர் ஆகிய இருவருமே நாங்கள் சாப்பிட்டுப் போட்ட இரண்டு இலை தான்.
அதை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளனர் என அதிமுகவினரே விமர்சித்து உள்ளனர். ஆகவே எச்சில் இலையை வைத்து ஒரு விழா நடத்துகிறார். அதில் ஏற்கனவே வெளியிட்ட கரூர் அறநிலையத்துறை நிலம் தொடர்பான அரசாணையை ஏதோ இவரிடம் கோரிக்கை வைத்து அதன் பிறகு வெளிடுவது போல ஒரு நாடகத்தை நடத்தி காட்டியுள்ளார். இந்த நாடகம் நடந்தது 10ம் தேதி, ஆனா 9ம் தேதியே அதற்கான அரசாணை போடப்பட்டுவிட்டது. இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம், எவ்வளவு பெரிய நாடகம். ஆக இப்படிப்பட்ட நாடகங்களை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்டுகிற வகையில் திமுக நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். குதிரை பேர புகாரின் பேரில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
