சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகள் 4, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் 16, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி 1, அரசு பொறியியல் கல்லூரிகள் 11, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 3, ஒன்றிய அரசின் பொறியியல் கல்லூரிகள் 3, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 394 என மொத்தம் 433 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 53 ஆயிரத்து 806 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.
அதில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக, 1 லட்சத்து 95 ஆயிரத்து 633 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 2,36,017 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஜூலை 1ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அதன்படி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 750 இடங்களில் கலந்துகொள்ள 159 மாணவர்களும், விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் உள்ள 38 இடங்களுக்கு 525 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு உள்ள 11 இடங்களுக்கு 14 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மாணவர்கள் www.t*eao*li*e.org என்ற இணையதளம் வழியாக தாங்கள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் பாட பிரிவுகளை பட்டியலிடலாம். இதை தொடர்ந்து, அவர்களுக்கான தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
தொடர்ந்து, பொதுப்பிரிவில், மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு ஜூலை 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. நேற்று நடந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான தற்காலிக ஒதுக்கீடு இன்று வழங்கப்படும். அவர்கள், ஜூலை 15ம் தேதி முதல் ஒதுக்கீட்டு இடங்களை பெற்றுக் கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
