உடலில் பெட்ரோல் ஊற்றி துணை ராணுவ பெண் தற்கொலை முயற்சி: சென்னை கோட்டையில் பரபரப்பு

 

சென்னை: முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் துணை ராணுவத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி நேற்று தலைமை செயலகம் முன் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனி பிரிவில் தினசரி ஏராளமானோர் வந்து தங்களது பிரச்னைகளை கோரிக்கை மனுவாக அளிப்பது வழக்கம். இந்த மனுக்களை அங்கிருந்த ஊழியர்கள் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்கள்.

முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, முதல்வரின் தனி பிரிவு அருகே, புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் புகார் அளித்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் உறுதி அளித்திருந்தார். இதனால், கடந்த இரண்டு மாதங்களாக புகார் அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திண்டிவனத்தை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற சுமார் 32 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று காலை தலைமை செயலகம் வந்தார்.

அவரை அங்கிருந்த போலீசார் தலைமை செயலகம் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால், அவர் தயாராக கொண்டு வந்திருந்த பாட்டிலை திறந்து அதில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றார். அப்போது, அங்கிருந்த காவலர்கள், பெண் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சி செய்வதை பார்த்ததும், பாய்ந்து சென்று அவரை தடுத்ததுடன், அவரது உடலில் தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். பின்னர், கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து, அந்த பெண்ணை அழைத்து சென்று விசாரணை நடத்தி னர்.

இதுகுறித்து தலைமை செயலக போலீசார் கூறும்போது, ‘‘சாமுண்டீஸ்வரி துணை ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது செஞ்சியை சேர்ந்த எம்.யூனுஸ் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் 2014ம் வருடத்தில் இருந்து காதலித்து வந்துள்ளனர். இன்னும் திருமணம் நடக்காத நிலையில், இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில், 2019ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்ய முயன்றபோது, யூனுஸ் உறவினர்கள் தடுத்து விட்டனர். இதற்கிடையில் சாமுண்டீஸ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தனது திருமணத்துக்கு தடையாக இருக்கும் யூனுஸ் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே முதலமைச்சர் பிரிவில் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மீண்டும் புகார் மனு கொடுக்கவே தலைமை செயலகம் வந்துள்ளார். அவரை உள்ளே அனுமதிக்காத காரணத்தால் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்” என்று கூறினர்.

Related Stories: