சென்னையில் தரையிறங்கியபோது பறவை மோதியதில் லண்டன் விமானம் சேதம்: 236 பேர் உயிர் தப்பினர்

 

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் லண்டன் விமானத்தின் மீது பறவை மோதியதில் விமானத்தின் முகப்பு பகுதி சேதமானது. அதிர்ஷ்டவசமாக அதில் வந்த 236 பேர் உயிர் தப்பினர். இதன் காரணமாக, விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, மீண்டும், சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணியளவில் லண்டன் புறப்பட்டு செல்லும். அதன்படி, நேற்று லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 224 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என 236 பேருடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.

அந்த விமானம் வழக்கமான நேரத்திற்கு முன்னதாக, அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்க தயாரானது. இந்நிலையில், அந்த விமானம் படிப்படியாக உயரத்தையும் வேகத்தையும் குறைத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, சுமார் 500 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென விமானத்தின் முன் பகுதியில் பறவை ஒன்று மோதி, விமானத்தின் இன்ஜின் பகுதிக்குள் சிக்கிக்கொண்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானி, மிகுந்த சாமர்த்தியமாக விமானத்தை பத்திரமாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமாக தரை இறங்கக்கூடிய இடத்தில் தரையிறக்கினார்.

இதனால், விமானத்தில் இருந்த 236 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, விமான பொறியாளர்கள் குழுவினர், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர். பறவை மோதி விமானம் சேதம் அடைந்துள்ளதால் அந்த விமானத்தை உடனடியாக மீண்டும் இயக்க முடியாது. பராமரிப்பு பணிகள் செய்து முடித்த பின்பு தான், விமானத்தை இயக்க முடியும் என்று விமான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 5.35 மணியளவில் லண்டனுக்கு சொல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் பயணிக்க இருந்த 268 பயணிகளும், சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் புறப்படும் நேரம் பின்னால் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ரூ.4.70 கோடி கஞ்சா பறிமுதல்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, தனியார் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டு வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது இளைஞரை பிடித்து அவரது சூட்கேஸை சோதனையிட்டனர்.

சூட்கேசில் இருந்த ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த 49 பாக்கெட் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 4 கிலோ 700 கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடியே 70 லட்சம். தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததில், கடத்தல் குருவியாக அவர் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கடத்தல் குருவியை கைது செய்த ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் போதை கடத்தல் கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: