மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய வளாகப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகளவிலான தெருநாய்கள் சுற்றி வந்து, சென்னைக்கு வந்து செல்லும் விமானப் பயணிகளுக்கு தொல்லை கொடுத்தன. இப்புகார்களின்பேரில் கடந்தாண்டு சென்னை விமானநிலைய நிர்வாகத்துடன் ப்ளூகிராஸ் மற்றும் விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து, விமான நிலைய வளாகப் பகுதிகளில் சுற்றி திரிந்து, பயணிகளை அச்சுறுத்தி வந்த சுமார் 40க்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்து சென்று அவற்றுக்கு இனவிருத்தி தடை அறுவை சிகிச்சை செய்து, நாய்க்கடி விஷமுறிவு ஊசிகள் செலுத்தி பாதுகாத்தனர். இதனால் சென்னை விமானநிலைய வளாகப் பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம், தொல்லை ஓரளவு குறைந்தது.
சமீபகாலமாக, சென்னை விமானநிலைய உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் மீண்டும் தெருநாய்களின் எண்ணிக்கை பெருத்து, தொல்லை அதிகரித்துள்ளது. விமானநிலைய வருகை, புறப்பாடு மற்றும் பார்க்கிங் பகுதிகளில் அதிகளவு சுற்றி திரியும் தெருநாய்கள் ஒன்றுடன் மற்றொன்று சண்டையிடுவது, வெளிநாடுகளில் இருந்து பெட்டி படுக்கைகளுடன் வெளியே வரும் விமான பயணிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துவது போன்றவற்றால் பயணிகளும் ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானநிலையத்தில் தெருநாய் தொல்லை பிரச்னையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமீபத்தில், விமானநிலையத்தில் சுற்றி திரிந்த தெருநாய்களை ஊழியர்கள் மூலம் பிடித்து, சுமார் 25 கிமீ தொலைவில் விட்டு வந்தோம். ஆனால், நாங்கள் இங்கு வருவதற்கு முன்பாகவே, அந்த தெருநாய்கள் மீண்டும் விமானநிலைய பகுதிக்கு வந்துவிட்டன. இப்பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மழுப்பலாக தெரிவித்தனர்.
